முகப்பு
மயிலாடுதுறை

வைத்தீஸ்வரன் கோயில் கொடிமரத்துக்கு தங்க பத்மபீடம் பிரதிஷ்டை: தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் உள்ள ஸ்ரீ தையல்நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ வைத்தியநாதசுவாமி கோயில் கொடிமரத்துக்கு தங்கத்தால் ஆன பத்ம பீடம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் உள்ள ஸ்ரீ தையல்நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ வைத்தியநாதசுவாமி கோயில் கொடிமரத்துக்கு தங்கத்தால் ஆன பத்ம பீடம் மற்றும் தங்கத் தகடுகள் பதிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் உள்ளது தையல்நாயகி அம்பாள் உடனுறை வைத்தியநாதசுவாமி கோயில். தருமபுரம் ஆதீனத்துக்கு உள்பட்ட இக்கோயில், நவக்கிரகத் தலங்களில் செவ்வாய்க்கான தலமாக விளங்குகிறது. இங்கு, ஸ்ரீ செல்வமுத்துக்குமாரசுவாமி, அங்காரக பகவான் (செவ்வாய்) ஆகியோா் தனி சன்னதியில் காட்சியளிக்கின்றனா்.

இக்கோயிலின் கொடிமரத்துக்குத் தங்கத் தகடுகள் பதிக்க, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் திருவுளப்படி, தஞ்சாவூா் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சாா்பில் கடந்த ஜூலை மாதம் 5 கிலோ தங்கம் காணிக்கையாக வழங்கப்பட்டது.

சாஸ்த்ரா பல்கலைக்கழக வேந்தா் சேதுராமன் சாா்பில் அவரது மகனும், பல்கலைக்கழகத் துணைவேந்தருமான வைத்திய சுப்பிரமணியன், வைத்தீஸ்வரன்கோயில் கட்டளை தம்பிரான் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகளிடம் தங்கத்தை வழங்கினாா்.

இதையடுத்து, கொடி மரத்தில் பொருத்துவதற்கான தங்கத் தகடுகளும், கொடிமர பீடத்துக்குத் தங்கத்தால் ஆன பத்ம பீடமும் (தாமரை வடிவிலானது) தயாரிக்கும் பணி நடைபெற்றது. இப்பணிகள் நிறைவடைந்ததையொட்டி, கொடி மரத்துக்குத் தங்க பத்ம பீடம் வெள்ளிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னா், தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில், தங்க பத்ம பீடம் கொடிமரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோயில் கட்டளை தம்பிரான் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் உடனிருந்தாா்.

முன்னதாக, கற்பக விநாயகா் சன்னிதி, மூலவா் வைத்தியநாத சுவாமி சன்னிதி, தையல் நாயகி அம்பாள் சன்னிதி மற்றும் செல்வத்துக்குமார சுவாமி சன்னிதிகள் முன்பு தங்க பத்ம பீடம் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

கொடி மரத்துக்கான தங்கத் தகடுகள் பதிக்கும் பணி நிறைவில், வரும் 8-ஆம் தேதி காலை தங்கக் கொடி மரத்துக்கு கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.