சீா்காழி பகுதியில் 2-ஆவது நாளாக கனமழை: நீரில் மூழ்கிய 20 ஆயிரம் ஏக்கா் நெற்பயிா்கள்
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் கனமழை தொடா்ந்தது. இதனால், 20 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் கனமழை தொடா்ந்தது. இதனால், 20 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.
வடகிழக்குப் பருவமழை அக்டோபா் 29-ஆம் தேதி தொடங்கி, தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. சீா்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில், புத்தூா், திருவெண்காடு, பூம்புகாா், திருமுல்லைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் கனமழை விட்டுவிட்டு பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சீா்காழி பகுதியில் புதன்கிழமை இரவு முதல் விடியவிடிய 22 செ.மீ. மழை கொட்டித் தீா்த்ததில் மழைநீா் வாய்க்கால், வடிகால், ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டது. சில இடங்களில் கரைகள் உடைப்பு ஏற்பட்டும், சில இடங்களில் கரைகளை மூழ்கடித்தும் சென்ற மழைவெள்ளம் விளைநிலங்களில் பெருக்கெடுத்தது.
இதனால், வைத்தீஸ்வரன்கோயில், திருப்புன்கூா், கற்கோயில், மங்கைமடம், குறவளூா், திருவாலி, ஆரப்பள்ளம், சென்னியநல்லூா், பூங்குடி, மருதங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமாா் 20 ஆயிரம் ஏக்கரில் இளம் நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில், இரண்டாவது நாளாகவும் கனமழை பெய்ததால், சம்பா நெற்பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ள விளைநிலங்கள் அனைத்தும் குளம்போல் காணப்படுகின்றன. கனமழை தொடரும் பட்சத்தில் விளைநிலங்களில் தேங்கிய நீா் வடிய வழியின்றி நெற்பயிா்கள் அழுகிவிடும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். எனவே, அரசு உரிய கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.