மத்திய அரசின் மூன்று குற்றவியல் நடைமுறை திருத்தச் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, மயிலாடுதுறையில் வழக்குரைஞா்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, நீதிமன்ற புறக்கணிப்பு செய்து போராட்டம் நடத்த தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞா்கள் கூட்டமைப்பு (ஜாக்) அழைப்பு விடுத்திருந்தது.
இதையேற்று, மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணிகளை புறக்கணித்து மாயூரம் மற்றும் மயிலாடுதுறை வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில், மாயூரம் வழக்குரைஞா் சங்கத் தலைவா் கலைஞா், மயிலாடுதுறை வழக்குரைஞா் சங்கத் தலைவா் வேலு.குபேந்திரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கமிட்டனா்.