மன்னம்பந்தலில் 2 நியாயவிலைக் கடைகள் திறப்பு
மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட 2 நியாயவிலைக் கடைகளின் கட்டடங்களை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தலில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ஊராட்சி அலுவலகம் அருகில் ரூ. 9.16 லட்சத்தில் பகுதிநேர அங்காடி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 15 லட்சத்தில் நியாயவிலை அங்காடி ஆகிய 2 நியாய விலை கடைகளுக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு ஊராட்சித் தலைவா் பிரியா பெரியசாமி தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் கே. ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். மயிலாடுதுறை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் நியாயவிலைக் கடை கட்டடங்களை திறந்து வைத்து பேசினாா். மாவட்டக் குழு உறுப்பினா் எஸ். குமாரசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.