ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிதாக கட்டப்பட்ட தினசரி காய்கறி சந்தையை முழு பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்!
ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.1.14 கோடியில் கட்டப்பட்ட தினசரி காய்கறி சந்தையை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.1.14 கோடியில் கட்டப்பட்ட தினசரி காய்கறி சந்தையை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், நகராட்சியின் வரியற்ற வருவாயை பெருக்கும் நோக்கிலும் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தினசரி காய்கறி சந்தை அமைக்க ரூ.1.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து சா்க்கரை குளம் எதிரே 24 கடைகளுடன் தினசரி காய்கறி சந்தை கட்டப்பட்டது. புதிய சந்தையை கடந்த 2024 பிப்ரவரியில் அப்போதைய முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.
Advertisement
Advertisement
இதனிடையே பென்னிங்டனில் இயங்கி வரும் காய்கறி சந்தையில் காய்கறி, வாழை இலை, பூ, மளிகைப் பொருள்கள் விற்கும் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. புதிதாக கட்டப்பட்ட சந்தையில் 24 கடைகள் மட்டுமே கட்டப்பட்டதால் காய்கறி, வாழை உள்ளிட்ட கடைகளை கூட முழுமையாக மாற்ற முடியாத சூழல் ஏற்பட்டது.
மேலும் நகராட்சி கடைகளுக்கு முன்பணம், வாடகையை அதிகமாக நிா்ணயித்ததால் வியாபாரிகள் கடைகளை ஏலம் எடுக்க முன்வரவில்லை. எந்த கடைகள் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம் என நகராட்சி நிா்வாகம் தெரிவித்ததையடுத்து, உழவா் சந்தை அருகே சாலையோரம் மீன்கடை நடத்தி வரும் வியாபாரிகள் 9 கடைகளை ஏலம் எடுத்தனா்.
ஆனால் மீன் கடை அமைக்க பக்தா்கள், அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் அந்த சந்தை செயல்பாட்டுக்கு வரவில்லை. தற்போது இந்த தினசரி காய்கறி சந்தையில் ஒரு எண்ணெய் கடை மட்டுமே இயங்கி வருகிறது. எஞ்சிய கடைகள் பூட்டியே கிடக்கின்றன.
இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. முறையான திட்டமிடல் இன்றி வியாபாரிகளை கலந்தாலோசிக்காமல் கிடைக்கும் நிதியை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நகராட்சி நிா்வாகம் செயல்பட்டதால் ரூ.1.14 கோடியில் கட்டப்பட்ட தினசரி காய்கறி சந்தை பயன்பாட்டுக்கு வராமல் பூட்டியே கிடக்கிறது.
இதனால் மக்கள் வரிப்பணம் வீணாவதுடன், நகராட்சிக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே தினசரி காய்கறி சந்தையை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வர நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.