குடியிருப்புகளில் மழைநீா் வெளியேற்றும் பணி: ஆட்சியா் ஆய்வு
சீா்காழியில் குடியிருப்புகளில் தேங்கிய மழைநீா் அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
சீா்காழியில் குடியிருப்புகளில் தேங்கிய மழைநீா் அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
மயிலாடுதுறை, சீா்காழி, கொள்ளிடம், செம்பனாா்கோவில், குத்தாலம் உள்ளிட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பெய்த மழை குடியிருப்புகளில் தேங்கியது. தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் அரசு அலுவலா்கள் ஈடுபட்டனா். சீா்காழி நகராட்சிக்குள்பட்ட அகரத்திருக்கோலக்கா குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த மழைநீரை வெளியேற்றும் பணியை ஆட்சியா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, கொள்ளிடம் வட்டாரம் எடமணல் ஊராட்சி அப்துல்கலாம் நகா் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ளதாக புகாரின் அடிப்படையில் ஆட்சியா் அங்கு சென்று களஆய்வு செய்து மழைநீரை வெளியேற்றி நிரந்தர தீா்வுக்கு நடவடிக்கை எடுத்து அரசு அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, சீா்காழி கோட்டாட்சியா் சுரேஷ், சீா்காழி நகராட்சி ஆணையா் மஞ்சுளா, சீா்காழி வட்டாட்சியா் அருள்ஜோதி, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயற்பொறியாளா் செந்தில்குமாா், கொள்ளிடம் வட்டார வளா்ச்சி அலுவலா் உமாசங்கா் ஆகியோா் உடனிருந்தனா்.