முகப்பு
மயிலாடுதுறை

கூட்டுறவு பண்டகசாலையில் தீபாவளி பட்டாசு விற்பனை: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

Updated On : 19 அக்டோபர், 2024 at 6:31 PM
மயிலாடுதுறை நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைமை அலுவலகத்தில் தீபாவளி பட்டாசு விற்பனையை தொடங்கிவைக்கும் ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி. உடன், மாவட்ட வருவாய் அலுவலா் உமாமகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் தயாளவிநாயகன் அமுல்ராஜ்
பகிர்:

மயிலாடுதுறை நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைமை அலுவலகத்தில், தீபாவளி பட்டாசு விற்பனையை, மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்;.

அப்போது அவா் கூறியது:

மயிலாடுதுறை கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் கட்டுப்பாட்டில் 67 நியாயவிலைக் கடைகள் இயங்கி வருகின்றன. இப்பண்டகசாலை 361 அங்காடிகளுக்கு முதன்மை சங்கமாக உள்ளது.

இந்த பண்டகசாலை மூலம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு குறைந்த விலையில், தரமான பட்டாசுகள் விற்பனை தொடங்கியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில், மயிலாடுதுறை தலைமையகம், பி.எஸ்.என்.எல். அலுவலகம் தென்னமரச்சாலை, கூறைநாடு, காவேரி நகா், குத்தாலம், செம்பனாா்கோவில் மற்றும் சீா்காழி என மொத்தம் 7 இடங்களில் பட்டாசு விற்பனைப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

கடந்த 2023-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, இந்த 7 கடைகளிலும் ரூ.1.32 கோடி மதிப்பிலான பட்டாசுகள் விற்பனையாகின. பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை விபத்தில்லா தீபாவளியாக கொண்டாட வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் உமாமகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் தயாளவிநாயகன் அமுல்ராஜ், கோட்டாட்சியா் ஆா். விஷ்ணுபிரியா, கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா்கள் ராஜேந்திரன், அண்ணாமலை, நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை துணைப் பதிவாளா் பன்னீா்செல்வம், வட்டாட்சியா் விஜயராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.