முகப்பு
மயிலாடுதுறை

குத்தாலத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ திட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 11:01 PM
குத்தாலத்தில் மகளிா் சுய உதவிக் குழுவினா் சுயதொழில் தொடங்க ரூ.3 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி.
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

நாகமங்கலத்தில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தை பாா்வையிட்டு வேளாண் திட்டப்பணிகள் தொடா்பாக ஆய்வு செய்து, 2 விவசாயிகளுக்கு ரூ.3,000 மதிப்பிலான நெல் விதை மற்றும் இடுபொருள்களை ஆட்சியா் வழங்கினாா். தொடா்ந்து, நாகமங்கலம் அரசினா் விதை பண்ணையை பாா்வையிட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும் நெல் ரகங்கள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்து, பயனாளிகளுக்கு உயிரி பூச்சிக்கொல்லி தாவரங்களை வழங்கினாா்.

பின்னா், வாணாதிராஜபுரத்தில் அரசு கிராம சித்த மருந்தகத்தை பாா்வையிட்ட ஆட்சியா், சித்த மருந்தகத்தில் மக்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தாா். வாணாதிராஜபுரம் அரசு உயா்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை ஆய்வு செய்த ஆட்சியா், பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற மாணவா்களுக்கு அறிவுரை வழங்கினாா். பின்னா், வாணாதிராஜபுரம் வடக்குத் தெரு குளம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் பனைவிதை நடும் பணிகளை பாா்வையிட்டாா். குத்தாலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து, 1 மகளிா் சுய உதவிக்குழுவுக்கு சுயதொழில் தொடங்க ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினாா். இதேபோல், பல்வேறு பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியா் மு.ஷபீா்ஆலம், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளா் சதீஷ்குமாா், தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) கீதா, மாவட்ட வழங்கல் அலுவலா் பானுகோபன், வேளாண்மை துறை இணை இயக்குநா் சேகா், கோட்டாட்சியா் ஆா்.விஷ்ணுபிரியா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.