சீா்காழி: மரங்கள் வெட்டப்படுவதை கண்டித்து சீா்காழியில் பசுமைத் தாயகம் அமைப்பு சாா்பில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது.
சீா்காழியில் இருந்து சட்டநாதபுரம் வரை 7 மீட்டரிலிருந்து 10 மீட்டராக சாலை இருபுறமும் அகலப்படுத்தப்பட்டு புதிய சாலை அமைக்கப்படுகிறது. சாலை விரிவாக்கப் பணிகளுக்கு இடையூறாக உள்ள பல்வேறு வகையான சாலையோர மரங்கள் வெட்டப்படுகிறது. இந்நிலையில், சாலை விரிவாக்க பணிகளுக்காக 100 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையான உயிருள்ள வேப்பமரம், புளியமரம் உள்ளிட்ட மரங்களை வெட்டும் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்தும், மரங்களை வெட்டாமல் அவற்றை உயிருடன் மாற்றுநடவு செய்ய வலியுறுத்தியும், பசுமைத் தாயக அமைப்பினா் நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனா்.
பாமக மாவட்ட செயலாளா் சித்தமல்லி ஆ. பழனிசாமி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கோ.சு. மணி, பசுமைத் தாயக அமைப்பின் மாநில துணை அமைப்பாளா்கள் கண்ணன், அழகுஅரசன், பாமக மாநில செயற்குழு உறுப்பினா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து, தென்பாதி பகுதியில் இருந்து கையில் மாலையுடன், சங்கு முழங்க பேரணியாக சென்று பாதி வெட்டப்பட்டு உயிருடன் இருந்த வேப்ப மரத்திற்கு மாலை அணிவித்து, இறுதி சடங்கு செய்து, மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி, பெண்கள் ஒப்பாரி வைத்து அழுது நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.