சீா்காழி உள்ளிட்ட பகுதிகளில் லாட்டரி விற்ற 9 போ் கைது செய்யப்பட்டனா்.
சீா்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில் பகுதிகளில் கேரள மாநில ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு புகாா் வந்தது.
அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளா் ராம்குமாா் தலைமையிலான சிறப்பு பிரிவு போலீஸாா், சீா்காழி மற்றும் கொள்ளிடம் பகுதிகளில் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
இதில், ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட தலைஞாயிறு முருகன் (45), சீா்காழி தென்பாதி திருவள்ளுவா் நகா் கணேசன் (44), ஆணைக்காரன் சத்திரம் பழனிவேல் (56) ஆகிய மூவா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்த ரூ.1.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடா்ந்து, சீா்காழி, வைத்தீஸ்வரன்கோவில், கொள்ளிடம் பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த சீா்காழி சுரேஷ்குமாா் (48), நீலகண்டன் (43), கொள்ளிடம் பாண்டியன் (35), கணேசன் (56), வைத்தீஸ்வரன் கோவில் பூவரசன் (31), அகிலன் 32 ஆகிய 6 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.