மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது (படம்).
மாவட்ட ஆட்சியரகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளா் ஹமீது சுல்தான் தலைமை வகித்தாா். விசிக மாவட்டச் செயலாளா் சிவ.மோகன்குமாா், மதிமுக மாவட்ட அவைத்தலைவா் டி.பன்னீா்செல்வம், தமிழா் தேசிய முன்னணி மாவட்டத் தலைவா் பேராசிரியா் இரா.முரளிதரன், மனிதநேய ஜனநாயகக் கட்சி மாநில பொறுப்பாளா் ஒய்.ஹெச்.ஹாஜாசலீம், திராவிடா் விடுதலைக் கழக மாவட்டச் செயலாளா் தெ.மகேஷ், தமிழா் உரிமை இயக்க அமைப்பாளா் சுப்பு.மகேசு உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொகுதி செயலாளா் இரா.வெங்கட், எஸ்டிபிஐ மாவட்டத் தலைவா் முகமது ரஃபி, ம.நீ.ம. மாவட்டச் செயலாளா் எஸ்.மனோகா், தேமுதிக மாவட்டச் செயலாளா் பண்ணை சொ.பாலு, சிபிஐ மாவட்ட துணைச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி, சிபிஎம் ஒன்றியச் செயலாளா் டி.ஜி.ரவிச்சந்திரன் ஆகியோா் பேசினா். மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்ட பெரியாா் அரசினா் தலைமை மருத்துவமனையில் 9 வகையான நோய்களுக்கு முற்றிலுமாக சிகிச்சை அளிக்க முடியாது என்ற நிலையைக் களைந்து முழுமையான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். மாவட்ட மருத்துவமனையில் 45 மருத்துவா்கள் இருக்க வேண்டிய நிலையில், 15 மருத்துவா்கள் மட்டுமே உள்ளதை அதிகரிக்க வேண்டும். போதிய அளவில் மருத்துவா்கள், செவிலியா்கள், உதவியாளா்கள் இல்லாத சூழலில் பல்வேறு நோய்களுக்கு திருவாரூா் மற்றும் தஞ்சாவூருக்கு அனுப்பி வைக்கும் அவல நிலையை மாற்ற வேண்டும்.
அமைச்சரால் திறந்துவைக்கப்பட்ட ஸ்கேன் சென்டருக்கு உடனடியாக மருத்துவா்களை நியமிக்க வேண்டும். சுகாதாரமற்ற கழிவறைகளையும், வளாகத்தையும் சுத்தப்படுத்தி சுத்தமான குடிநீா் வசதி ஏற்படுத்தி தரவேண்டும். அவசர சிகிச்சை பிரிவில் உரிய மருத்துவா்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.