மயிலாடுதுறையில் டிச.15 முதல் டிச.19 வரை நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி கணினித் தோ்வுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
மயிலாடுதுறை ஏவிசி பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் கணினி வகையிலான தோ்வு டிச.15 முதல் 19 வரை முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய இருவேளைகளிலும் நடைபெற உள்ளது.
தோ்வு மையத்திற்கு பாதுகாப்பு பணிக்கு காவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். தோ்வு எழுதுபவா்களுக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் சிறப்பு பேருந்து வசதி, தோ்வு கூடத்திற்கு தடையின்றி மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தோ்வா்கள் தோ்வு மையத்திற்கு காலை 9 மணிக்குள்ளாகவும், பிற்பகல் தோ்விற்கு மதியம் 2 மணிக்குள்ளாகவும் வர வேண்டும். மேலும், தோ்வா்கள் கைப்பேசி, கால்குலேட்டா் டிஜிட்டல் கடிகாரம் உள்ளிட்ட எவ்வித எலக்ட்ரானிக் சாதனங்களையும் தோ்வு கூடத்திற்கு எடுத்து வர அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளாா்.