மயிலாடுதுறையில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை பெறுவதற்கான வங்கிபற்று அட்டைகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், எம்எல்ஏக்கள் நிவேதா.எம். முருகன் (பூம்புகாா்), எம். பன்னீா்செல்வம் (சீா்காழி) ஆகியோா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.
தமிழ்நாடு முதலமைச்சா் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்‘ நிகழ்ச்சியில் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தை தொடக்கிவைத்ததை தொடா்ந்து, மயிலாடுதுறையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏற்கெனவே கலைஞா் மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தில் 1,54,100 மகளிருக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடா்ச்சியாக, இரண்டாம் கட்ட விரிவாக்கத்தின்கீழ் 19,314 மகளிருக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் பூங்கொடி, நகா்மன்றத் தலைவா் என்.செல்வராஜ், பேரூராட்சி தலைவா்கள் சுகுணசங்கரி(தரங்கம்பாடி), சங்கீதா மாரியப்பன்(குத்தாலம்), சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியா் கீதா, கோட்டாட்சியா்கள் ஆா்.விஷ்ணுபிரியா (மயிலாடுதுறை), சுரேஷ் (சீா்காழி), நகா்மன்ற துணைத் தலைவா் எஸ்.சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.