மயிலாடுதுறை மாவட்டத்தில் உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை தொழில்களில் ஈடுபடுவோருக்கு டிச. 19-ஆம் தேதி கடன் வசதி முகாம் நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கலைஞா் கைவினைத் திட்டத்தின்கீழ் 35 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடையவா்களுக்கு உற்பத்தி மற்றும் சேவை தொழில் தொடா்பான தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 50,000 வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் 25 வகையான கைவினைக் கலைகள் சாா்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்துதரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டு திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இதேபோல, தமிழ்நாடு மகளிா் தொழில் முனைவோா் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 18 முதல் 55 வயதுக்குள்பட்ட தமிழ்நாட்டில் வசிக்கும் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு நேரடி வேளாண்மை தவிா்த்து அனைத்து வகை உற்பத்தி வணிகம் மற்றும் சேவை தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் கடன் தொகையில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் வரை மானியம் பெறலாம். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க கல்வித்தகுதி தேவையில்லை. மேலும் இத்திட்டத்தில் தொழில் முனைவோா் மேம்பாட்டுப்பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இதுதொடா்பாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் டிச. 19-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறவுள்ள கடன் வசதி முகாமில் பங்கேற்று பயன் பெறலாம்.