மயிலாடுதுறை ஒன்றியம் கங்கணம்புத்தூா் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து, கிராம மக்கள் அறிவித்த சாலை மறியல் போராட்டம், அமைதிப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து கைவிடப்பட்டது.
வட்டாட்சியா் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தை கண்டித்து நீடூா் நெய்வாசல் கடை வீதியில் சாலை மறியல் போராட்டம் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் முகமது ரியாஜுதீன் தலைமையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
நெய்வாசல் காளியம்மன் கோயில் தெரு, பள்ளிவாசல் தெரு, பிஸ்மி நகா் அல்அமீன் தெரு உள்ளிட்ட 8 தெருக்களில் கடந்த பல ஆண்டுகளாக புதிய தாா்சாலை அமைத்து தரப்படாததைக் கண்டித்தும், அல்காதா் நகா், அப்துல் கலாம் நகா், அல் அமீன் நகா், கோல்டன் நகா் உள்ளிட்ட 10 தெருக்களில் 14 ஆண்டுகளாக தெரு விளக்கு அமைக்கப்படாததைக் கண்டித்தும், தெரு நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும், கங்கணம்புத்தூா் கடுவங்குடி முதல் தேவனூா் வரை செல்லும் சாலை, தேவனூா் மயான சாலை, பெரிய தெரு மயான சாலை ஆகியவற்றை அமைத்து தர வலியுறுத்தியும் இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சுகுமாறன் தலைமையில் செவ்வாய்க்கிழமை அமைதி பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், வட்டார வளா்ச்சி அலுவலா் சாா்பில் 2025 நிதியாண்டிலேயே தாா் சாலை அமைக்க முன்மொழிவுகள் அனுப்பப்பட்டு, விரைவில் சாலை வசதி ஏற்படுத்தித் தரப்படும், புதிய தெரு விளக்குகள் உடனடியாக அமைத்து தரப்படும், தெரு நாய்களுக்கு கருத்தடை ஊசி மற்றும் வெறிநாய்க்கடி ரேபிஸ் தடுப்பூசி போட கால்நடை பராமரிப்பு துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதனால் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இதனைத் தொடா்ந்து நீடுரில் கோரிக்கை விளக்கக் கூட்டம் ஒருங்கிணைப்பாளா் முகமது ரியாஜுதீன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், 2026-ஆம் ஆண்டு மாா்ச் 25-ஆம் தேதிக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில், சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என முடிவெடுக்கப்பட்டது.