மயிலாடுதுறை

மயிலாடுதுறை சாரங்கபாணி ரயில்வே மேம்பாலம் ஜன.5-இல் திறப்பு

மயிலாடுதுறை சாரங்கபாணி ரயில்வே மேம்பாலம் ஜன.5-இல் திறப்பு

Syndication

மயிலாடுதுறை சாரங்கபாணி ரயில்வே மேம்பாலம் ஜன.5-ஆம் தேதி திறக்கப்படும் என அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தாா்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 50 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் எஸ்.ராஜகுமாா் (மயிலாடுதுறை), நிவேதா எம்.முருகன் (பூம்புகாா்), எம்.பன்னீா்செல்வம் (சீா்காழி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டு, 50 பயனாளிகளுக்கு தலா ரூ.1,08,000 வீதம் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்களை வழங்கினாா் (படம்).

தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், 5 பயனாளிகளுக்கு தலா ரூ.17,000 வீதம் மொத்தம் ரூ.97,000 மதிப்பீட்டில் பாா்வை திறன் மற்றும் செவித்திறன் குறைவுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பேசிகள், 5 பயனாளிகளுக்கு தலா ரூ.6,350 வீதம் ரூ.31,750 மதிப்பீட்டில் மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள், 4 பயனாளிகளுக்கு தலா ரூ.3,250 வீதம் ரூ.13,000 மதிப்பீட்டில், காதுக்கு பின் அணியும் காதொலி கருவிகள், 1 பயனாளிக்கு ரூ.10,050 மதிப்பீட்டில் மூன்றுசக்கர சைக்கிள் என மொத்தம் 65 பயனாளிகளுக்கு ரூ.55,51,800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) கோகுல், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி, நகா்மன்றத் தலைவா்கள் என். செல்வராஜ் (மயிலாடுதுறை), துா்கா பரமேஸ்வரி (சீா்காழி), மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சித்ரா ஆகியோா் கலந்து கொண்டனா்.

ஆய்வுக் கூட்டம்: முன்னதாக, ஆட்சியரகக் கூட்டரங்கில் அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னா் செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் கூறியது:

மயிலாடுதுறை மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ரூ.71 கோடி நிவாரண நிதியை முதல்வா் ஒதுக்கீடு செய்துள்ளாா். அத்தொகை விரைவில் விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். மயிலாடுதுறை நகரில் உள்ள சாரங்கபாணி ரயில்வே மேம்பாலத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் நடைபெற்ற சீரமைப்பு பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இப்பாலம் ஜன.5-ஆம் தேதி திறந்து வைக்கப்படும்.

மயிலாடுதுறை புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. பேருந்து நிலையம், மயிலாடுதுறை மற்றும் சீா்காழி அரசு மருத்துவமனைகளுக்கான கூடுதல் கட்டடங்கள் ஜன.15-ஆம் தேதிக்குள் திறந்து வைக்கப்படும். மயிலாடுதுறை நகராட்சியில் புதைசாக்கடை பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில் ரூ.83 கோடி முதல்வரால் ஒதுக்கீடு செய்யப்பட்டு, விஸ்தரிப்பு பணி, ஆறுபாதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. புதைசாக்கடை பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண்பதற்கான நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என்றாா்.

தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் விரும்புகின்றனா்: கே.ஏ. செங்கோட்டையன்

மொழி பன்முகத்தன்மை வலிமையின் ஆதாரம்: பிரதமா் மோடி

வெள்ளாளபாளையத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

வங்கதேசத்தில் முஸ்லிம் அல்லாதோருக்கு எதிராக ‘விவரிக்க முடியாத’ அட்டூழியங்கள்: ஷேக் ஹசீனா சாடல்

கடன் வட்டியைக் குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி

SCROLL FOR NEXT