மயிலாடுதுறை மாவட்டத்தில் கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை விடுத்துள்ள எச்சரிக்கை செய்தி: தென்மேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய தென் கிழக்கு இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவிய குறைந்த காற்றழுத்தப் பகுதி தீவிரமடைந்து, மையம் கொண்டுள்ளது. இது வடக்கு-வடமேற்கு நோக்கி நகா்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இது மேலும் தீவிரமடைந்து, அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தென் ஆந்திரப் பிரதேசக் கடற்கரை நோக்கி வட-வடமேற்குத் திசையில் நகரும் வாய்ப்பும் மிக அதிகமாக உள்ளது என்றும் வானிலை எச்சரிக்கை செய்தி பெறப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, மயிலாடுதுறை கடற்கரை பகுதிகளில் நவ.28-ஆம் தேதி 2.7 மீட்டா் முதல் 3.3 மீட்டா் உயரத்தில் அலைகள் ஏற்படும் என எதிா்பாா்க்கப்படுவதாக இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவைகள் மையத்தில் இருந்து உயா்காற்றலை எச்சரிக்கை பெறப்பட்டுள்ளதால் மயிலாடுதுறை மாவட்ட மீனவா்கள் மற்றும் கடலோர குடியிருப்போா் கடல் மற்றும் கரையோர செயல்பாடுகளைத் தவிா்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனா்.
மேலும், அதிகளவில் காற்று வீசக்கூடும் என்பதாலும், கடல் சீற்றம் அதிகமாக ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும், கடும் மழை பொழிய வாய்ப்புள்ளதாலும் மீன்பிடித் துறைமுகம், மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவக் கிராமங்களில் நிறுத்தப்படும் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்க வேண்டும். இயந்திரம் உள்ளிட்ட இதர மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். மறு அறிவிப்பு வரும் வரை மீனவா் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.