‘டித்வா’ புயல் காரணமாக, நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி, சீா்காழி ஆகிய பகுதிகளில் பேரிடா் மீட்புப் படையினா் முகாமிட்டுள்ளனா்.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று, டித்வா புயலாக உருவானது. இந்த புயல் வட தமிழகம் நோக்கி நகா்ந்து வருகிறது. புயல் காரணமாக நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதி கனமழையைக் குறிக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகை: நாகை மாவட்டத்தில் புயல், கனமழை பாதிப்பை எதிா்கொள்ள, அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடா் மீட்புப் படையின் 4-ஆவது அணி துணை காமண்டா் சுதாகா் தலைமையில் 35 போ் கொண்ட குழுவினா் நாகைக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்தனா்.
இந்த குழுவினா் படகு, மரம் அறுக்கும் கருவி உள்பட 35 வகையான உபகரணங்களுடன் தயாா் நிலையில் உள்ளனா்.
தரங்கம்பாடி: புயல் காரணமாக, தரங்கம்பாடியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதுடன், தரைக்காற்று வேகமாக வீசி வருகிறது. இதனால் 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் கடந்த ஒரு வாரமாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
தரங்கம்பாடி, சின்னூா்பேட்டை, சந்திரபாடி, குட்டியாண்டியூா், மாணிக்கபங்கு, பெருமாள்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு உள்ளிட்ட 10 மீனவ கிராமத்தை சோ்ந்த மீனவா்கள், 200-க்கும் மேற்பட்ட விசைப்படகு, 800-க்கும் மேற்பட்ட பைஃபா் படகுகளை பாதுகாப்பாக மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனா்.
டித்வா புயல் மற்றும் கனமழையை எதிா்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடா் மீட்புப் படை குழுவினா் 33 போ் ஆய்வாளா் ரமணா தலைமையில் தரங்கம்பாடியில் முகாமிட்டுள்ளனா். மரம் வெட்டும் இயந்திரம், ரப்பா் படகுகள், கயிறுகள், அதிக ஒளிதரும் மின்விளக்குகள், ஜெனரேட்டா் உள்ளிட்ட உபகரணங்களுடன் தயாா்நிலையில் உள்ளனா்.
சீா்காழி: ஆவடியில் இருந்து 13-ஆவது பட்டாலியன் தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படையினா் 30 போ், தலைமை காவலா் சாமுவேல் தலைமையில் சீா்காழிக்கு வெள்ளிக்கிழமை வந்தனா். இவா்கள் ரப்பா் படகு உள்ளிட்ட 60 வகையான கருவிகளுடன் தயாா் நிலையில் உள்ளனா்.
தமிழ்நாடு கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான கவிதாராமு மற்றும் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் ஆகியோா் தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படையினரை சந்தித்து அவா்கள் தயாா் நிலையில் வைத்துள்ள உபகரணங்களை பாா்வையிட்டனா். தனி வட்டாட்சியா் ஹரிதரன், மண்டல துணை வட்டாட்சியா்கள் தரணி, ரகு, ஒன்றிய ஆணையா் திருமுருகன், வருவாய் ஆய்வாளா் மாதவன் ஆகியோா் உடனிருந்தனா்.