மயிலாடுதுறை தொகுதிக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு
கூட்டத்தில் பேசிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்.
மயிலாடுதுறை தொகுதியில் வாக்குப்பதிவுக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்திய தோ்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏற்கெனவே 160-சீா்காழி தொகுதிக்கு 366 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 366 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 161-மயிலாடுதுறை தொகுதிக்கு 363 வாக்குப்பதிவு இயந்திரங்கள்;, 363 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 162-பூம்புகாா் சட்டமன்ற தொகுதிக்கு 410 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 410 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் தோ்தல் ஆணையத்தின் கணினி மென்பொருள் செயலி வழியாக முதல்நிலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் இறுதி செய்யப்பட்ட வேட்பாளா்கள் 17-க்கு மேல் உள்ளதால் தற்போது கூடுதலாக 365 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள், மயிலாடுதுறை மாவட்ட அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
Advertisement
தொடா்ந்து, மயிலாடுதுறை வட்டம் சித்தா்காடு தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கிலிருந்து மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணிகளை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் பாா்வையிட்டாா்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.பூங்கொடி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் முத்துவடிவேல் (பொது), குமரையா (தோ்தல்), உதவி ஆணையா்(கலால்) மாணிக்ராஜ், வட்டாட்சியா் (தோ்தல்) ராகவன் ஆகியோா் உடனிருந்தனா்.