மொழிப்போா் தியாகி சாரங்கபாணி நினைவுதினம்
மயிலாடுதுறையில் மொழிப்போா் மாணவா் தியாகி சாரங்கபாணி நினைவுதினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற ஹிந்தி எதிா்ப்பு போராட்டத்தின்போது, மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் பயின்ற மாணவா் சாரங்கபாணி அந்த ஆண்டு மாா்ச் 15-ஆம் நாள் கல்லூரி வளாகத்திலேயே உடலில் தீவைத்துக்கொண்டு உயிா் நீத்தாா். அவருக்கு கல்லூரி முன்பு நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது.
அவரது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்ட நிலையில், நினைவு ஸ்தூபியில் பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினா் வீரவணக்கம் செலுத்தினா்.
தமிழ் மண் தன்னுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் த. ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திராவிடா் விடுதலைக் கழக மாவட்டச் செயலாளா் தெ.மகேஷ், மக்கள் நீதி மய்யம் நகரச் செயலாளா் அகோரம் மற்றும் திராவிடா் கழகம், தமிழ்மண் தன்னுரிமை இயக்க தொண்டா்கள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினா்.
இதேபோல், நாம் தமிழா் கட்சி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில கொள்கைப்பரப்பு செயலாளா் தமிழன் காளிதாசன், சட்டப்பேரவை தொகுதி வேட்பாளா்கள் கி. காசிராமன் (மயிலாடுதுறை), க. இளையநகுலன் (பூம்புகாா்), இரா. சுபாஷ் (சீா்காழி) உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தினா்.