நாகப்பட்டினம்

கம்பர் மேட்டை மறைக்கும் கருவேல மரங்கள் 

ஏ.ஹிபாயத்துல்லா

தமிழ் இலக்கியத்தின் மிகப் பெரும் இதிகாசமான கம்ப ராமாயணத்தைப் படைத்த கவிச்சக்கரவர்த்தி கம்பர் வாழ்ந்த இடம் கருவேல மரங்களால் சூழப்பட்டிருப்பது தமிழார் வலர்களின் நெஞ்சை  நெருடுவதாக  உள்ளது.
கற்பனை வளம், கவிதை நயம், கதை அமைப்பு, நாடகத் திறன் என ஒரு காப்பியத்துக்குத் தேவையான அத்தனை அம்சங்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் மாபெரும் இதிகாசமான கம்பராமாயணத்தைப் படைத்த கவிச்சக்கரவர்த்தி பிறந்த ஊர், நாகை மாவட்டம், குத்தாலம் வட்டத்தில் உள்ள தேரழந்தூர் என்னும் கிராமம்.
இங்கு கம்பர் வாழ்ந்த இடத்துக்கு "கம்பர் மேடு' என்ற பெயர் விளங்குகிறது. கம்பரின் நினைவைப் போற்றும் வகையில் 1984-இல் ரூ. 25 லட்சத்தில் தேரழுந்தூரில் கம்பர் கோட்டம் கட்டப்பட்டு அப்போதைய தமிழக அமைச்சர்கள் இரா. நெடுஞ்செழியன், இராம. வீரப்பன் ஆகியோர் முன்னிலையில், அப்போதைய முதன்மைச் செயலர்  கு. சொக்கலிங்கத்தால் திறந்துவைக்கப்பட்டது.
கம்பரின் முழு உருவச் சிலையுடன் அமையப் பெற்ற இந்த கம்பர் கோட்டம் நீண்ட காலமாகப்  பராமரிக்கப்படாமலேயே இருந்தது. மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி மேற்கொண்ட முயற்சிகளால், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த "கம்பர் கோட்டம்' உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.
 கம்பர் கோட்ட வளாகத்திலேயே சமையலறை, உணவு அருந்தும் கூடம், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ரூ. 35 லட்சத்தில் அமைக்கப்பட்டு, கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் கம்பர் திருமண மண்டபமாக செயல்பட்டு வருகிறது கம்பர் கோட்டம்.
தற்போது குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் பராமரிக்கப்படும் கம்பர் திருமண மண்டபத்தில், திருமணம் உள்ளிட்ட விழாக்களும், அரசு விழாக்களும் நடைபெற்று வருகின்றன. மாநில அரசின் கட்டுபாட்டில் உள்ள கம்பர் கோட்டத்தின் செயல்பாடுகூட ஓரளவு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.   ஆனால், கம்பர் வாழ்ந்த இடமான கம்பர் மேட்டின் நிலை அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது. இந்த இடம், இந்திய தொல்லியல் துறையின்  அகழ்வாராய்ச்சிக்கு உள்படுத்தப்பட்டு,1958 ஆம் ஆண்டின் புராதனச் சின்னங்கள் மற்றும் புதையுண்ட தொல்பொருள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  கம்பர்மேடு பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டது எனவும், இதைச் சேதப்படுத்துபவர்கள் அல்லது ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்திய தொல்லியல் துறை சார்பில் கம்பர் மேடு பகுதியில் ஒரு அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள், அந்தப் பலகையில் மட்டும் தான் உள்ளது. காரணம், கம்பர் மேடு பகுதியில் இந்திய தொல்லியல் துறையின் பராமரிப்பு, கண்காணிப்பு என்பது துளியும் இல்லை என்பதே உண்மை.
  "கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு' என மகாகவி பாரதியாலும், "அம் புவியில் மக்கள் அமுதம் அருந்த வைத்த கம்பர் கவியே கவி'என கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையாலும் மேலும் பல ஆன்றோர்களாலும், சான்றோர்களாலும் போற்றி புகழப்பட்ட கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த இடம் தமிழ்க் கோயிலாக திகழ்ந்திருக்க வேண்டும்.
ஆனால், தற்போதைய நிலையில் "கம்பர் மேடு' என்பது  உள்ளூர்வாசிகளின் அறிவிக்கப்படாத கழிப்பறையாகவும், கம்பர் மேட்டின் சுற்றுச்சுவர் வேலிகள் துணிகள் காய வைக்கும் இடமாகவும் மாறியிருப்பது வேதனையிலும், வேதனை.
   கம்பரசம் பருகிய தமிழார்வலர்கள் பலர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கம்பர் பிறந்த இடத்தை காண தேரழுந்தூர் வந்து, கருவேல மரங்களை மட்டுமே பார்த்து மனம் வெதும்பிச் செல்வது அன்றாட நிகழ்வாகி வருகிறது. தேரழுந்தூரில்,  கம்பன் வாழ்ந்த இடங்கள் முழுமையிலும் தற்போது கருவேல மரங்களே வளர்ந்துள்ளன.
   உயர்நீதிமன்ற உத்தரவின்படி, அரசு மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்ட நாள்களில் கூட, கம்பர் மேட்டை கவனிப்பார் யாரும் இல்லை என்பது வேதனைக்குரியது. அகழாய்வும், பராமரிப்பும் இல்லாத நிலையில், தமிழகத்தின் தலையாய புலவர்களுள் ஒருவரான  கம்பர் பிறந்த இடத்தை பெயரளவுக்குத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் என்ன பெருமை கிடைத்து விடும் தொல்லியல் துறைக்கு என்பது தமிழார்வலர்கள் எழுப்பும் நியாயமான கேள்வி.
   "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்' என்ற முதுமொழிக்கு உண்மையான செயல்வடிவம் கிடைக்கும் வகையில், கம்பன் வாழ்ந்த இடம் தமிழ்ப் பரப்பும் இடமாக மாற வேண்டும் என்கின்றனர் கம்பரசம் பருகிய சான்றோர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

பன்னுன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய புலனாய்வு அதிகாரிகள்: வாஷிங்டன் போஸ்ட்

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினருக்கு சம்மன்!

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

SCROLL FOR NEXT