மயிலாடுதுறையில் துலா உத்ஸவம் தொடக்கம்
மயிலாடுதுறை அருள்மிகு அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் திருக்கோயில் துலா உத்ஸவம், ஐப்பசி முதல் நாளான செவ்வாய்க்கிழமை துலா மாதப் பிறப்பு தீர்த்தவாரியுடன் தொடங்கியது.
மயிலாடுதுறை அருள்மிகு அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் திருக்கோயில் துலா உத்ஸவம், ஐப்பசி முதல் நாளான செவ்வாய்க்கிழமை துலா மாதப் பிறப்பு தீர்த்தவாரியுடன் தொடங்கியது.
30 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அமாவாசை தீர்த்தவாரி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று மயிலாடுதுறை துலாகட்ட காவிரியில் புனித நீராடி வழிபாடு மேற்கொண்டனர். திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் அருளாசியுடன் அக்.18-ஆம் தேதி துலா மாதப் பிறப்பு தீர்த்தவாரியுடன் தொடங்கி நவம்பர் 16-ஆம் தேதி நடைபெறும் கடைமுகத் தீர்த்தவாரியுடன் நிறைவுபெறுகிறது.
அமாவாசை தீர்த்தவாரி : இவ்விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அமாவாசை தீர்த்தவாரி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு, காலை நேர நிகழ்வாக கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் துலாக்கட்ட காவிரியில் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளிய அருள்மிகு அபயாம்பிகை உடனுறை மயூரநாதருக்கும், அஸ்திரத் தேவர்களுக்கும் செய்யப்பட்ட சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர் பிற்பகல்1.30 மணிக்கு அருள்மிகு அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் தீர்த்தம் கொடுத்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு , தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான அருள்மிகு ஞானாம்பிகை , சமேத வதான்யேசுவரர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் துலாக்கட்ட காவிரியின் வடபக்கக் கரையில் பஞ்சமூர்த்திகளுடன் வதான்யேசுவரர் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சுமார் 3 மணியளவில் வதான்யேசுவரர் காவிரியில் தீர்த்தம் கொடுத்தருளல் நடைபெற்றது. சுவாமி அம்பாள் தீர்த்தம் கொடுத்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றபோது மயிலாடுதுறை மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர்.
இந்நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் இளைய சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை அம்பலவாண தம்பிரான் சுவாமிகள், மயூரநாதர் திருக்கோயில் கண்காணிப்பாளர் எஸ். குருமூர்த்தி, துணைக் கண்காணிப்பாளர் எஸ். கணேசன் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: மயிலாடுதுறை சார் ஆட்சியரின் உத்தரவின்பேரில் துலாக்கட்ட காவிரியில் வியாழக்கிழமை தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்தனர் .
துலாக்கட்ட காவிரியில் மூழ்கி பள்ளி மாணவர் ஒருவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். இது குறித்து செய்தியறிந்த மயிலாடுதுறை சார்ஆட்சியர் பா.பிரியங்கா, துலாக்கட்ட காவிரிக்கு புனித நீராடுவதற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, போதிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்யவேண்டும் என்று மயிலாடுதுறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் செ. முனியாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், துலாக்கட்ட காவிரியில் நீராடுவதற்கு வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்புக்காக காவிரி ஆற்றில் கயிறு மூலம் பாதுகாப்பு வேலிகளை அமைத்தனர். மேலும் ஆழம் நிறைந்துள்ள பகுதிகளில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்படவுள்ளதாகவும் செ. முனியாண்டி தெரிவித்தார்.
முக்கிய நிகழ்வுகள்
அக்.30 விநாயகர் துவாஜரோகணம் , நவ.7 மகத்துவஜாரோகணம்(திருக்கொடியேற்றம்), 11-ஆம் தேதி சகோபுர தரிசனம், மயிலம்மன் பூஜை, 13-ஆம் தேதி திருக்கல்யாணம்,15-ஆம் தேதி திருத்தேரோட்டம், 16-ஆம் தேதி கடைமுகத் தீர்த்தவாரி. நவ.17-ஆம் தேதி முடவன் முழுக்கும், 20-ஆம் தேதி யதாஸ்தானமும் நடைபெறவுள்ளது.