2,870 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்: அமைச்சர் வழங்கினார்
நாகப்பட்டினத்தில் நடைபெற்ற விழாவில் 2,870 மாணவ, மாணவியருக்கு ரூ. 3 கோடியே 55 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பிலான
நாகப்பட்டினத்தில் நடைபெற்ற விழாவில் 2,870 மாணவ, மாணவியருக்கு ரூ. 3 கோடியே 55 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகளை தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமை வகித்தார். விழாவில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பங்கேற்று, விலையில்லா மடிக்கணினிகளை வழங்கிப் பேசியது:
மக்களின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைய வேண்டுமானால், அனைவரும் கல்வி கற்றவர்களாக இருந்தால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்து, பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பென்சில் முதல் 14 வகையான உபகரணங்கள், ஏழை மாணவர்களும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக 11 மற்றும் 12 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் உள்ளிட்ட பல சிறந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் 2018-2019 -ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித்துறைக்காக ரூ. 27,205 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி மாணவ, மாணவியரின் கல்வித் தரம் மேம்படும் வகையில் அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதன் விளைவாக கிராமப்புற மாணவர்கள், நகர்ப்புற மாணவர்களை விஞ்சும் அளவுக்கு கல்வித் தரம் உயர்ந்து காணப்படுகிறது. மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றால் மட்டும்போதும் என்று இல்லாமல், நன்கு கல்வி கற்று அதிக மதிப்பெண் பெற்றால் தான், இன்றைய போட்டி நிறைந்த உலகில் முன்னேற்றப் பாதையில் நடை போட முடியும் என்பதை உணர வேண்டும்.
மாணவ, மாணவியர் இந்த மடிக்கணிணிகளை நல்ல விஷயங்களுக்காக மட்டும் பயன்படுத்திக் கொண்டு, தம் கல்வித் திறனை மேம்படுத்திக் கொள்ள
வேண்டும்.
சாதாரண மனிதன் கூட முயற்சி செய்தால் உயர்ந்த நிலையை அடைய முடியும். முயற்சி எடுத்து படித்தால், அதிக மதிப்பெண் பெற்று வாழ்வில் சிறந்த நிலையை அடைய முடியும் என்றார் அமைச்சர் ஓ.எஸ். மணியன்.
விழாவில் கீழ்வேளூர், கீழையூர் நாகை ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த 2,870 மாணவ, மாணவியருக்கு ரூ. 3 கோடியே 55 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
விழாவில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் கே. கோபால், நாகை சட்டப் பேரவை உறுப்பினர் எம். தமிமுன் அன்சாரி, முதன்மைக் கல்வி அலுவலர் அ. கஸ்தூரிபாய், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ். ஆசைமணி, சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் தங்க. கதிரவன், பள்ளித் தலைமையாசிரியர்கள், மாணவ, மாணவியர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.