நாகப்பட்டினம்

ஆபத்தை தவிர்க்க மாற்றுத் தொகுப்பு வீடுகள் கட்டப்படுமா? உயிரை கையில் பிடித்துக்கொண்டு வசிக்கும் மக்களின் எதிர்பார்ப்பு

உயிரை கையில் பிடித்துக்கொண்டு பழுதடைந்த ஆபத்தான நிலையிலுள்ள தொகுப்பு வீட்டில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி

கே.பி. அம்​பி​கா​பதி

உயிரை கையில் பிடித்துக்கொண்டு பழுதடைந்த ஆபத்தான நிலையிலுள்ள தொகுப்பு வீட்டில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி மாற்றுத் தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. 
மத்திய அரசு கொண்டு வந்த இந்திரா குடியிருப்பு கட்டும் திட்டம் தொடக்க நிலையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு பயனளித்தது. தொடக்கத்தில், சுமார் ரூ. 6 ஆயிரம் மதிப்பில் 200 சதுர அடி அளவில் மண் சாந்து கொண்ட செங்கல் சுவருடன் கூடிய மங்களூர் ஓட்டு வீடுகளாக அமைக்கப்பட்டது. தமிழகத்தில் 1985-1990-ஆம் ஆண்டுகளில் அனைத்து ஊராட்சிகளிலும் இந்த வீடுகள் கட்டும் பணி நடைபெற்றது. ஊராட்சிக்கு குறைந்தது 20 வீடுகளுக்கு குறையாது, மக்கள் தொகைக்கு ஏற்ப எண்ணிக்கை அதிகரித்தது. 
ஆதிதிராவிடர், பழங்குடியினர் குடியிருப்புகளில் ஒரே இடமாக இவ்வீடுகள் ஒப்பந்ததாரர்கள் மூலம் கட்டிக் கொடுக்கப்பட்டதுடன், அப்பகுதி மக்களின் பயன்பாட்டுக்கு ஊராட்சிக்கு தலா ஒரு சமுதாயக் கூடம் கட்டப்பட்டது. பின்னர், இந்திரா குடியிருப்பு கான்கிரீட் தொகுப்பு வீடு திட்டமாக மாற்றி, செங்கல் சுவருடன் கூடிய கான்கிரீட் வீடுகளாக கட்டப்பட்டன. சில இடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு தொகுப்பாகவும் கட்டப்பட்டது. அத்துடன் இவ்வீடுகள் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள் மட்டுமன்றி பொருளாதார நிலையில் வறுமைக் கோட்டுக்குகீழ் வசிக்கும் அனைத்து வகுப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது. சுமார் ரூ. 27 ஆயிரம் முதல் 35 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டன.
தற்போது, இத்திட்டத்தில் படிப்படியாக மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு அதற்கான தொகையும் உயர்த்தி வழங்கப்படுகிறது. ஆனால், பல இடங்களில் சுமார் 20 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகள் மிகவும் பழுதடைந்து பராமரிப்பின்றி ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இவற்றை பாதுகாப்பானதாக மாற்றி அமைத்துக் கொள்ள பொருளாதார நிலையில் வாய்ப்பும் வசதியும் இல்லாமல், ஆபத்து என்பதை உணர்ந்தும் அதை பொருட்படுத்தாமல் விதியே என்று மக்கள் வசித்து வருவது வேதனையளிக்கிறது. 
அண்மைக் காலமாக  அரசு பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டிக்கொடுத்த தொகுப்பு வீடுகள் இடிந்து உயிர்ப் பலியாவது தொடர்கிறது. தொகுப்பு வீடுகள் பழுதாகி எந்த நேரத்திலும் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பது அரசுக்கும் தெரியும், ஆனால் மாற்று வழிகளுக்கான திட்டங்கள் இல்லாததால் விபத்துகளும், அப்பாவி மக்களின் உயிரிழப்பும் தொடர்கிறது. 
குறிப்பாக, நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள வேட்டைக்காரனிருப்பு கிராமத்தில் ஜூன் 20-ஆம் தேதி 1990-இல் கட்டப்பட்ட வீடு இடிந்த விபத்தில் கல்லூரி மாணவர் பிரகாஷ்ராஜ் உயிரிழந்தார். தலைஞாயிறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போது ஆபத்தான நிலையில் உள்ள தொகுப்பு வீடுகள் குறித்து அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். 
இடிக்கப்பட்ட சமுதாயக் கூடங்கள்:கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத்தில் நாகை மாவட்டம், பொறையாறு அரசுப் பேருந்து பணிமனை இடிந்து விழுந்த விபத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் 8 பேர் உயிரிழந்தனர். இதை, முன்னுதாரணமாக கொண்டு பழுதடைந்த பள்ளி, அரசுக் கட்டடங்களை இடிக்க ஏற்கெனவே உள்ள விதிகளை தளர்த்தி அரசு உத்தரவிட்டது. அதேபோல, பல கட்டடங்கள் அவசர நிலையில் தகர்க்கப்பட்டுள்ளன. இவற்றில் தொகுப்பு வீடுகளுடன் கட்டப்பட்ட சமுதாயக் கூடங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தொகுப்பு வீடுகள் மட்டும் ஆபத்தானவையாக இருந்தும் அதற்கான உத்தரவும் இல்லை, அவை இடிக்கப்படவும் இல்லை. 
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயலர் அ. சீனிவாசன் கூறியது: விவசாயத் தொழிலாளர்கள் அதிகமாக வசிக்கும் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அடிக்கடி தொகுப்பு வீடுகள் இடிந்து உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. பாதிக்கப்படுவோருக்கு அரசு நிவாரணம் அளிக்கவேண்டும். தொகுப்பு வீடுகளை மாற்றி அமைக்கவோ, சீரமைக்கவோ அரசு கவனம் செலுத்துவதில்லை. மிகக் குறைந்த தொகையில் கட்டப்பட்ட வீடுகள் என்பதால் அது ஏழைகளுக்கே கிடைத்தது. இப்போது பழுதடைந்தும் வேறு வழியில்லாமல் மக்கள் குடியிருக்கின்றனர்.
ஆனால், தற்போது செயல்படுத்தப்படும், தமிழக அரசின் பசுமை வீடுத் திட்டம், பிரதம மந்திரியின் வீடுகட்டும் திட்டம் போன்றவைகளுக்கு தொகை அதிகமாக வழங்கப்படுகிறது. அந்த வீடுகள் ஏழைகளுக்கு கிடைப்பதில்லை. அரசியல், பொருளாதார செல்வாக்கு உடையவர்களுக்கே கிடைக்கிறது. அப்படியே கிடைத்தாலும் அதை முழுமையாக கட்டும் அளவுக்கு பொருளாதாரம் இல்லை. இதற்கான மாற்று வழிகாட்டுதல் உதவி தேவை என்றார் அவர்.
அரசு ஆய்வு மேற்கொள்ளுமா ? :நாகை மாவட்டம் மட்டுமன்றி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பழுதடைந்த வீடுகளில் வசிக்கும் மக்களின் விவரங்கள், அவர்களது பொருளாதார நிலைப்பாடுகள் குறித்து அரசு ஆய்வு செய்யவும், மாற்று குடியிருப்புக்கான ஏற்பாடுகளை செய்யவும், மத்திய மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். 
இல்லையெனில், தொகுப்பு வீடுகள் விபத்துக்குள்ளாவதும், உயிரிழப்பும் தொடர் கதையாகிவிடும். எனவே, ஆபத்து நிகழும் முன் அரசு விழித்துக்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

மிஸ் பண்ணிடாதீங்க... ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

SCROLL FOR NEXT