கிராமப்புறப் பகுதிகளுக்கு தகவல் தொழில்நுட்ப இணைய சேவையை அளிக்கும் பிஎஸ்என்எல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளால் அடிப்படைத் தேவைகள், அறிவுப் புரட்சி, பொருளாதாரம் சார்ந்த அரசின் திட்டப் பயன்கள் மக்களுக்கு முழுமையாக கிடைப்பது கேள்விக் குறியாகி வருகிறது.
டிஜிட்டல் இந்தியா: வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மத்திய, மாநில அரசுத் திட்டங்கள் பெரும்பாலும் கணினிமயமாக்கப்பட்டு ஆன்-லைன் எனப்படும் இணைய சேவையின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பல்வேறு சான்றிதழ்கள் பெறுவது, அரசின் திட்டங்களுக்கு விண்ணப்பித்தல் அதன் பயன்களை பெறுதல், தேர்வுகள், வங்கி பணப் பரிமாற்றம், எரிவாயு உருளைப் பதிவு, ரயில், பேருந்து, விமான பயணச்சீட்டு பெறுதல், மின் கட்டணம் செலுத்துதல் என பலவும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
இவை, மக்களின் சிரமங்களை கருத்தில்கொண்டு கால விரயத்தை தவிர்ப்பது மட்டுமல்லாமல் முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், அண்மை காலமாக தகவல் தொழில்நுட்ப செயல்பாட்டில் ஏற்படும் நிர்வாக பிரச்னைகளால் பாதிப்புகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக எழுத்தறிவு குறைந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்களது தேவைக்கு பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதோடு, இக்கரைக்கு அக்கரை பச்சையாக வேறு வேறு நிறுவன சேவைகளுக்கு மாற்றிக்கொண்டு பொருளாதாரத்தை இழந்து வருகின்றனர்.
உதாரணமாக நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதி கிராமப்புறங்களை உள்ளடங்கியது. இங்குள்ள மக்களின் பிரதான வாழ்வாதாரமான மீன்பிடி, உப்பு உற்பத்தி போன்றவை கடல், கடலோரம் சார்ந்ததாகும். இப்பகுதி இலங்கைக்கு அருகாமையில் இருப்பதால் அங்கு அரசுக்கும் போராளிகளுக்கும் இடையே நேர்ந்த உள்நாட்டு போருக்கு முன்பு வரை தகவல் தொழில்நுட்ப சேவைகளில் சில கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வந்தன. இதனால், செல்பேசிகளுக்கான கோபுரங்களை பயன்படுத்தி அளிக்கப்படும் சேவையைவிடவும், தரைவழி மார்க்கமாக அளிக்கப்படும் பிஎஸ்என்எல் சேவை மக்களுக்கு பெரிய அளவில் பயனுள்ளதாக இருந்தது. 2004-இல் ஏற்பட்ட சுனாமி தாக்கத்தின்போதும், வடகிழக்கு பருவக் கால புயல் பாதிப்புகளின்போதும் மற்ற சேவைகள் முடங்கிய நிலையிலும் பிஎஸ்என்எல் பயனளித்தது.
முடங்கும் பிஎஸ்என்எல்: ஆனால் அந்த நிறுவனத்தின் சேவை தற்போது படிப்படியாக பாதிப்படைந்து முடங்கிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, பின்தங்கிய கிராமமான தகட்டூர் மின்னணு (பிஎஸ்என்எல்) இணைப்பகத்தில் 750 தரைவழி இணைப்புகள் இருந்தன. தற்போது, அது 50 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. மேலும், நகர்புற இணைப்பக தகுதியை அடைந்த ஆயக்காரன்புலம் கிராம மின்னணு இணைப்பகம் பாதிக்கும் மேலான வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதேபோல் செம்போடை, தாணிக்கோட்டகம், உம்பளச்சேரி, வேதாரண்யம், கோடியக்கரை, கரியாப்பட்டினம், தலைஞாயிறு ஆகிய பிஎஸ்என்எல் இணைப்பகங்களும் கேள்விக் குறியாகி வருகிறது.
பிஎஸ்என்எல் பராமரிக்கும் செல்லிடப் பேசிக்கான கோபுரங்கள் பிற நிறுவனங்களின் சேவைக்கே பெரும்பான்மையாக பயனளிப்பதாக உள்ளன. பிஎஸ்என்எல் புதிய இணைப்புகள், பழுதான தடங்கள் சீரமைப்பது போன்ற பல்வேறு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு இல்லாதது, ஆள்குறைப்பு போன்றவையே இக்குறைபாடுகளுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அப்படியே நிதி கிடைத்தாலும் தரையில் கம்பிகளை பதிக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு பணம் செலுத்துவது போன்ற நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
இதனால், பல இடங்களில் தரைவழி கம்பிகள் திறந்த நிலை கம்பிகளாக பாதுகாப்பற்று காணப்படுகின்றன. இதனிடையே, ஏர்செல் நிறுவன சேவை முடங்கிய நிலையில், சீரான செல்லிடப்பேசி, இணைய சேவையைக் கருத்தில் கொண்டு பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் சேவைக்கே வாடிக்கையாளர்கள் மாறினர். இங்கு எதிர்பாத்த அளவில் சேவை கிடைக்காததால் மக்கள் பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தனியாருக்கு சாதகமாக: பிஎஸ்என்எல் மட்டுமல்லாது பிற தனியார் நிறுவன சேவைகளும் அவர்கள் விளம்பரம் செய்யும் அளவில் திறன் இல்லை. இதனால், வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நிறுவனமாக மாறி மாறி பணத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். இதனிடையே, தனியார் நிறுவனம் (ஜியோ) ஒன்று அனைத்து பகுதிகளிலும் தரையை தோண்டாமலே இயந்திரம் மூலம் துளையிட்டு கம்பிகளை பதித்து தரைவழி சேவைக்கு ஆயத்தமாகி வருகிறது. இந்த தனியார் சேவைக்கு சாதகமாகவே பிஎஸ்என்எல் பணிகள் முடக்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதேபோன்று மற்ற தனியார் நிறுவனங்களும் அதை எதிர்கொள்ளும் அளவில் சக்தியாக செயல்பட முடியாத காரணத்தால் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
இ-சேவை மையம்: சாதி, வருமானம், இருப்பிடம், பட்டா மாறுதல் போன்ற பல்வேறு தேவைகளை வருவாய்த் துறை, கூட்டுறவு வங்கிகளில் செயல்படும் இ-சேவை மையங்கள் மூலம் பெற்றுக்கொள்ள அரசு வழிவகை செய்துள்ளது.
இருப்பினும், இ-சேவை மையங்கள், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் பயன்பாட்டுக்கான கணினியை இணைக்கும் இணைய சேவையில் ஏற்படும் குறைபாட்டால் பயனாளிகள் பாதிக்கப்படுவது தொடர்கிறது. உரிய நேரத்தில் சான்றுகள் கிடைக்காத காரணத்தால் திருமண உதவி போன்ற அரசின் திட்டங்களுக்கு குறித்த காலத்துக்கு விண்ணப்பிப்பது தடைபடுகிறது.
மாநில அரசு கவனம் செலுத்துமா ?:
நலத்திட்டங்கள் மட்டுமல்லாமல், பள்ளிகளுக்கான புதிய பாடத் திட்டத்தில் பாடம் தொடர்பான கூடுதல் விவரங்களை இணையத்தின் வழியாக அறியவும், அதிலிருந்து கிடைக்கும் இசை வடிவ பாடல்கள், காட்சி வடிவ கதைகள், பாடத்துக்கு தொடர்புடைய ஆவணப் பதிவுகளை தெரிந்துக் கொள்ளவும் வகை செய்யப்பட்டுள்ளது. இது அறிவுப் புரட்சியை ஏற்படுத்தும்.
ஆனால், கிராமப்புறப் பள்ளி ஆசிரியர்களோ, மாணவர்களோ அதை முழுமையாக அறிய இணைய சேவை குறைபாடு தடையாக உள்ளது. திட்டங்களை உருவாக்கும் அரசுகள் அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணைய சேவைகளையும் உறுதிப்படுத்தவேண்டும். போதிய சேவையை வழங்காமல் போலியான விளம்பரங்களை செய்து மக்களை ஏமாற்றும் நிறுவனங்கள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் மீது மாநில அரசு கவனம் செலுத்துவதோடு, அதன் சேவையை அரசு நிறுவனங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளவும் முன்வரவேண்டும். அத்துடன், தரைவழி பாதை அமைப்பதில் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க தனியார் நிறுவனத்துக்கு அளிக்கும் அதே கொள்கையை பின்பற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.