மீனவர்களின் வலையில் சிக்கிய கஞ்சா
நாகை மாவட்டம், திருவெண்காடு அருகே கீழமூவர்க்கரையில் மீனவர்களின் வலையில் சிக்கிய கஞ்சா பைகளை போலீஸார் திங்கள்கிழமை கைப்பற்றினர்.
நாகை மாவட்டம், திருவெண்காடு அருகே கீழமூவர்க்கரையில் மீனவர்களின் வலையில் சிக்கிய கஞ்சா பைகளை போலீஸார் திங்கள்கிழமை கைப்பற்றினர்.
திருவெண்காடு அருகேயுள்ள கீழமூவர்க்கரையைச் சேர்ந்தவர் சரவணன் (32). மீனவர். இவர் ஞாயிற்றுக்கிழமை தனக்குச் சொந்தமான ஃபைபர் படகில், மோகன்ராஜ் (23), பெருமாள் (45), எல்லப்பன் (55), தங்கதுரை (45) ஆகியோருடன் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனராம். அப்போது, வலையில் 10 நெகிழிப் பைகள் சிக்கின.
அவற்றை திங்கள்கிழமை காலை கரைக்குக் கொண்டு வந்த மீனவர்கள், திருவெண்காடு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில், காவல் ஆய்வாளர் வேலுதேவி உள்ளிட்ட போலீஸார், பைகளைச் சோதனை செய்ததில், 40 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அந்த பைகள் நாகை கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதுதொடர்பாக கடலோர காவல் படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.