நாகப்பட்டினம்

5 ஆயிரம் ரூபாய்க்காக 5 ஆண்டுகளை அடகு வைக்காதீர்கள்: கமல்ஹாசன் வேண்டுகோள்

வாக்குக்காக அளிக்கப்படும் 5 ஆயிரம் ரூபாய்க்காக 5 ஆண்டுகளை மக்கள் அடகு வைத்து விடக் கூடாது என

DIN

வாக்குக்காக அளிக்கப்படும் 5 ஆயிரம் ரூபாய்க்காக 5 ஆண்டுகளை மக்கள் அடகு வைத்து விடக் கூடாது என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார்.
நாகை அவுரித் திடலில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதி மய்ய பிரசாரப் பொதுக் கூட்டத்தில், நாகை மக்களவைத் தொகுதி வேட்பாளர் கே. குருவைய்யாவுக்கு ஆதரவு கோரி அவர் பேசியது : 
கஜா புயலின் போது மீனவர்கள் அடைந்த துயரம் மிக அதிகம் என்பதை நான் நேரில் பார்த்து உணர்ந்துள்ளேன். 
கஜா புயலுக்குப் பின்னர் இந்தப் பகுதிகளில் நான் 3 முறை சுற்றி வந்துள்ளேன். அரசியலுக்கு வந்த பின், ஏன் இந்த அரசியலுக்கு வந்தோம் என்ற நினைப்பு வருகிறதா? என சிலர் கேள்வி எழுப்புவர். ஆனால், கஜா புயல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வந்து பார்த்த போது, ஏன் இவ்வளவு தாமதமாக வந்தோம் என்றுதான் என் மனம் விம்மியது.
வேதாரண்யத்தில் ஏற்பட்ட கஜா புயல் பாதிப்புகள் இதுவரை என் நெஞ்சைவிட்டு அகலாமலேயே உள்ளன. விழுந்த மரங்கள், விழுந்த நிலையிலே கிடக்கின்றன. சுற்றுலா மையமான கோடியக்கரை சரணாலயம் இதுவரை சீரமைக்கப்படவில்லை. சுற்றுச் சூழல் சரியில்லாத இடத்துக்கு யாரும் சுற்றுலா வரமாட்டார்கள் என்பது கூட உணரப்படவில்லை. 
பூரண மதுவிலக்குக் கொண்டு வரப்படுமா? எனக் கேட்கின்றனர். பூரண மதுவிலக்குக் கொண்டு வரப்பட்ட எந்த இடமும் ஒரு மாஃபியாவை உருவாக்காமல் இருந்ததில்லை.  மதுவிலக்கு என்பது மக்களால் மட்டுமே சாத்தியம். மூக்குப்பொடி பழக்கம் முன்பு அதிகமாக இருந்தது. பின்னர், அது மக்களின் மனமாற்றத்தால் குறைந்தது. அதேபோல,  பூரண மதுவிலக்கை உடனடியாகக் கொண்டு வராமல், மதத்தின் பெயரால், பகுத்தறிவின் பெயரால், கல்வியின் பெயரால் எந்த வகையில் மதுவைத் தவிர்க்க முடியுமோ அதை நாம் அனைவரும் இணைந்து செய்ய வேண்டும். 
நிலக்கரி அள்ளிச் செல்லும் போது ஊர் முழுக்கச் கரித்துகள் சிந்துகிறது. ஆனால், மணல் மட்டும் சிந்தாமல், சிதறாமல் கொண்டுச் செல்லப்படுகிறது. நிலக்கரி பாதுகாப்பாகக் கொண்டுச் செல்லப்பட வேண்டும். 
மணல் எடுக்க அனுமதிக்கவே கூடாது. மணல் கொள்ளை கண்டிப்பாகத் தடுக்கப்பட வேண்டும்.
ஆட்சி மலரும் என்ற பாஜகவின் கனவு தமிழகத்தில் என்றும் பழிக்காது. அவர்கள் நினைக்கும் தாமரை நிச்சயமாக இங்கு மலராது. தாமரைக்கு பல பெயர்கள் உண்டு. அதில், ஒன்று கமல். இதற்காக என்னை "பி' டீம் எனச் சொல்லி, பதற்றத்தில் புரளியைப் பரப்புகிறார்கள். இதன் மூலம், கொஞ்சம் வாக்குகளையாவது பெறலாம் என அவர்கள் நினைக்கின்றனர். 
இந்தியா ஒருங்கிணைந்த இந்தியாவாகவே இருக்க வேண்டும். இந்திய தேசியக் கொடி மூவர்ண கொடியாகவே இருக்க வேண்டும். அதில், ஒரே வர்ணம் பரவிடக் கூடாது என்பதுதான் என் கருத்து.  
மக்கள் நீதி மய்யத்திற்கு தேர்தல் ஆணையம் செய்த நன்மை டார்ச் லைட் சின்னம் வழங்கியதுதான். இது தமிழகம் முழுவதும் ஒளி வீசுகிறது. நீலகிரியில் இரவு 10 மணிக்கு மேல் யாரும் டார்ச் லைட் பயன்படுத்தக் கூடாது எனத் தடைவிதிக்கும் அளவுக்கு மக்கள் நீதி மய்யத்தின் சின்னம் ஆட்சியாளர்களுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 
அனைவரும் புரிந்து கொள்ள மறந்த விஷயம், வாக்குகளுக்காக அளிக்கப்படும் பணம் அனைத்தும் மக்கள் பணம் என்பதுதான். மக்கள் பணத்தை பெரும்பான்மையாக அபகரித்தவர்கள், கொஞ்சம் பணத்தை வாக்குக்காக விட்டு எறிகின்றனர் என்பதுதான் உண்மை.  5 ஆயிரம் ரூபாய்க்காக 5 ஆண்டுகளை அவர்களிடம் அடகு வைத்து விட்டால், மக்களின் வாழ்க்கை நிலை நிச்சயம் மேம்படாது. 
தமிழகத்தின் உரிமையைப் பெற்றுத் தரும் அழுத்தமான குரல், நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்து வெகுகாலம் ஆகிவிட்டது. அந்தக் குறையை மக்கள் நீதி மய்ய மக்களவை உறுப்பினர்கள் சரி செய்வார்கள். அதற்கான வாய்ப்பை மக்கள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றார் கமல்ஹாசன்.
மக்கள் நீதிமய்ய நாகை மக்களவைத் தொகுதி வேட்பாளர் கே. குருவையா உடனிருந்து வாக்குச் சேகரித்தார். கட்சியின் நாகை மாவட்டப் பொறுப்பாளர் அனஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மக்களுக்கு உதவாத அரசை அகற்ற வேண்டும்...
திருவாரூர், ஏப்.11: திருவாரூரில், நாகை மக்களவைத் தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் குருவையா, திருவாரூர் சட்டப் பேரவை தொகுதி வேட்பாளர் அருண் சிதம்பரம் ஆகியோரை ஆதரித்து பேசிய கமல்ஹாசன், மக்களுக்கு உதவாத அரசை அகற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், அவர் பேசும்போது, "மக்கள் நீதி மய்யம் மட்டுமே எல்லா கட்சிகளிலிருந்து மேம்படுகிறது. போகப்போக எங்களின் நேர்மையும், நியாயமும் உங்களுக்கு புரியும். தற்போது வேட்டிக் கட்டிய அரசியல்வாதிகள், நேர்மையற்றவர்களாக இருப்பதால், வேட்டி கட்டவும் தயக்கமாக உள்ளது. வேட்டிக்கு மரியாதை வாங்கித் தரப்போவது மக்கள் நீதி மய்யமே. எனவே, ஏப்ரல்18-ஆம் தேதி,  மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்' என்றார் அவர்.
தொண்டர்கள் ஏமாற்றம்... 
கூத்தாநல்லூர், ஏப். 11: மக்கள் நீதி மய்யம் நிறுவனத் தலைவர் கமலஹாசன் கூத்தாநல்லூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதாக இருந்தது. இதற்காக, கமல்ஹாசனின் ரசிகர்கள் அவரது பேச்சை கேட்க ஆவலுடன் திராளானோர் காத்திருந்தனர். இந்நிலையில், திருவாரூரில் பிரசாரத்தை நிறைவு செய்த கமல்ஹாசன் நேரமின்மையால் கூத்தாநல்லூரை புறக்கணித்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால், கூத்தாநல்லூரில் கமல்ஹாசனின் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையின் தனித்துவமாக பொருநை அருங்காட்சியகம் திகழும்: அமைச்சா் எ.வ.வேலு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

புறவழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மனு

SCROLL FOR NEXT