நாகப்பட்டினம்

உரிய விலை கிடைக்காததால் வருவாய் இழப்பு: நிலக்கடலை விவசாயிகள் வேதனை

நிலக்கடலைக்கான ஆதார விலையை அரசு நிர்ணயம் செய்யாத நிலையில், வெளிச்சந்தையில் கட்டுப்படியாகாத விலையில் நிலக்கடலை விற்பனை செய்து வருவதால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நாகை

அ. அன்புமணி


நிலக்கடலைக்கான ஆதார விலையை அரசு நிர்ணயம் செய்யாத நிலையில், வெளிச்சந்தையில் கட்டுப்படியாகாத விலையில் நிலக்கடலை விற்பனை செய்து வருவதால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நாகை மாவட்டத்தைச் சேர்ந்த நிலக்கடலை விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
ஏழைகளின் பாதாம் என்று கூறப்படும் நிலக்கடலை, தமிழக வட்டார வழக்குகளில் வேர்க்கடலை, மணிலாக்கடலை, கடலைக்காய், மணிலாகொட்டை என்று பலவாறாக கூறப்படுகிறது. தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட நிலக் கடலையானது, இந்தியா, சீனா, நைஜீரியா ஆகிய நாடுகளில் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றன. 
தமிழகத்தைப் பொருத்தவரை விழுப்புரம், திண்டிவனம், கடலூர், நாகை மாவட்டங்களில் பரவலாக நிலக்கடலை பயரிடப்படுகிறது. 90 நாள்களில் (குறுகிய காலத்தில்) பயன்தரக்கூடிய பணப்பயிர் என்பதாலும், கால்நடைகளுக்கு நிலக் கடலைச் செடி சிறந்த தீவனமாக உள்ளதாலும்  நிலக்கடலையைப் பயிர் செய்வதில் விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் பகுதிகளில் உள்ள மணற்பாங்கான, மேடான நிலப்பரப்புகளில்  நிலக்கடலை பயிரிடப்படுகிறது. பண்டைய காலம் முதலே நிலக்கடலை உணவில் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. இதிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் கடலை எண்ணெய் சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரை பாகுடன் சேர்த்து உருவாக்கப்படும் நிலக்கடலை மிட்டாய் வகைகள் மற்றும் இனிப்பு உருண்டைகளை சிறியவர் முதல் பெரியவர் வரைஅனைவரும் விரும்பிச் 
சாப்பிடுகின்றனர்.
மனித உடலுக்குத் தேவையான கால்சியம், துத்தநாகம், தாமிரச் சத்துகளைக் கொண்ட  நிலக்கடலை, மருத்துவ குணமுடையது என மருத்துவ ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. பாரம்பரிய உணவுப் பொருளான நிலக்கடலை உணவுப் பொருள்களின் பட்டியலிலிருந்து படிப்படியாக விலகி வருகிறது. அமெரிக்கர்களின் உணவுப் பட்டியலில் முக்கியத்துவத்தைப் பெற்றுவரும்  நிலக்கடலை, இந்தியாவில் மலிவாக கிடைப்பதால் அதன் மகிமை நமக்குத் தெரிவதில்லை.
கஜா புயல், தமிழக கடலோர மாவட்டங்களான நாகை, கடலூர் திருவாரூர், தஞ்சை மற்றும் திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைப் புரட்டிப் போட்டது. சுமார் 4.50 லட்சம் வீடுகள் சேதமடைந்தன. 40 லட்சத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் முறிந்தும், வேரோடும் சாய்ந்து அழிந்தன. விவசாயிகளின் வாழ்வாதாரங்களான ஆடு, மாடு, கோழிகள், மா, பலா, முந்திரி, கரும்பு உள்ளிட்ட பயிர்களும் சேதமடைந்தன. புயல் சீற்றத்தால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள் இன்றளவும் கூட சகஜ நிலைக்குத் திரும்பமுடியாமல் அவதியுற்று வருகின்றனர். 
கஜா புயல் சீற்றத்தால் பெரும் பாதிப்புக்குள்ளான நாகை மாவட்டப் பகுதிகளில் உள்ள கடலோர கிராமங்களில் கடல் நீர் உள்புகுந்ததால்,  மண்ணின் தரம் மாறுபட்டுள்ளது. இதனால், புயலுக்குப் பின்னர் கடலோர கிராமங்களில் விவசாயப் பணிகள் சரியாக நடைபெறவில்லை எனவும், கடல் நீர் உள்புகுந்ததால் நிலத்தில் நச்சுத் தன்மையும் அதிகமாகியுள்ளது. இதனால், விவசாயத்துக்கு ஏற்ற வகையில் நிலத்தைப் பக்குவப்படுத்துவதில் சிரமம் நீடித்து வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 
கடும் வறட்சி, நீர்ப் பற்றாக்குறை, பொருளாதார பிரச்னை ஆகியவைகளை எல்லாம் கடந்து வேளாங்கண்ணி, பூவைத்தேடி, காமேஸ்வரம், வேட்டைக்காரனிருப்பு, புதுப்பள்ளி, விழுந்தமாவடி, கோவில்பத்து மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மணற்பாங்கான, மேடான தோட்டங்களிலும், வயல்களிலும் நிலக்கடலையைப் பயிரிட்டு தற்போது அறுவடை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நிலக்கடலை மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வருத்தமடைந்துள்ளனர். நிலக்கடலைக்கென அரசு ஆதார விலை நிர்ணயம் செய்யாத நிலையில், உற்பத்தி செய்த  நிலக்கடலையை குறைந்த விலைக்கு வெளிச்சந்தையில் விற்பனை செய்வதால், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,  நாகை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். வேளாண் உற்பத்தியில் தன்னிறைவுப் பெற்று வரும் இந்தியாவில், விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு கிட்டாத விலையே கிடைப்பதால், விவசாயிகளின் வாழ்வு தன்னிறைவு பெறுவது இயலாததாகியுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியது: எம்.ராமகிருஷ்ணன் (பூவைத்தேடி): குறுகிய காலத்தில் பயன் தரக்கூடிய பணப் பயிரான நிலக்கடலை மார்கழி மற்றும் ஆடிப்பட்டங்களில் பயிரிடப்பட்டு வருகின்றன. கஜா புயலுக்குப் பின்னர் நாகை மாவட்டத்தில் சுத்தமாக மழையில்லை. 
இதனால், நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துவிட்டதால் நிலக்கடலை பயிருக்கு முறையாக தண்ணீர்பாய்ச்ச முடியவில்லை. இதனால், மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. தோட்டக்கலை பயிர்களுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். நெல், கோதுமை ஆகியவைகளுக்கு ஆதார விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும். அப்போது தான்  நிலக்கடலை விவசாயிகளின் வருவாய் இழப்பு 
தவிர்க்கப்படும்.
ஆர். ராஜேந்திரன் (காமேஸ்வரம்: ஒரு  ஏக்கரில் நிலக்கடலை பயிரிட ரூ. 25 ஆயிரம் வரை செலவிட்டுள்ளோம். தண்ணீர்ப் பற்றாக்குறை, கடும் வறட்சியின் காரணமாக நிகழாண்டில் மகசூல் வெகுவாக குறைந்துள்ளது. ஒரு ஏக்கரில் 50 மூட்டைகள் வரை அறுவடை செய்துள்ளேன். தற்போது 20 மூட்டைகள் மட்டுமே கிடைத்துள்ளன. தாய் முகத்தை பார்க்காத குழந்தையும், மழையைப் பார்க்காத பயிரும் செழிக்காது என்பதற்கு இதுவே சான்று.
ஏ.வைரமூர்த்தி (பூவைத்தேடி): நிலக்கடலைக்கு தொடர்ச்சியாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும். கடும் வறட்சியால் சரியாக தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதனால் மகசூல் குறைந்துள்ளது. நிலக்கடலைக்கென அரசு  விலை நிர்ணயம் செய்யாததால் கிலோ ரூ. 40-க்கு மொத்த வியாபாரிகளிடம்  விற்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். மகசூல் குறைவாக இருந்தாலும், நிலக்கடலை செடி ஆடு, மாடுகளுக்கு தீவனமாகிவிடும் என்ற காரணத்தால் மகிழ்ச்சியில் உள்ளேன் என்றார்.
 நிலக்கடலை மொத்த வியாபாரி அன்புசெல்வம் கூறியது : 40 கிலோ எடை கொண்ட ஒரு நிலக்கடலை மூட்டை ரூ. 2,200-க்கு வாங்கி பொள்ளாச்சி, திண்டுக்கல்  திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகளில் அனுப்பப்படுகின்றன. நிலக்கடலையின் தரத்துக்கேற்ற வகையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி விதிப்பா?

தொழில் வரி செலுத்தியதாக போலி ரசீது கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி: இளைஞரிடம் போலீஸாா் விசாரணை

ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டாச்சு... தண்ணீர் இல்லாமல் தெப்பத் திருவிழா நடைபெறுமா?

இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்

மண்டல அலுவலா்கள், பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான பயிற்சி கூட்டம்

SCROLL FOR NEXT