நாகப்பட்டினம்

செருப்புக் கடை உரிமையாளர் வீட்டில் குண்டு வீச்சு: 2 தொழிலாளர்கள் கைது: இணைப்புப் பாலம் கட்டப்படுமா?

நாகை நகரம் மற்றும் அக்கரைக்குளம் பகுதியை இணைக்கும் வகையில், தேவநதியின் குறுக்கே புதிய பாலம்

அ. அன்புமணி

நாகை நகரம் மற்றும் அக்கரைக்குளம் பகுதியை இணைக்கும் வகையில், தேவநதியின் குறுக்கே புதிய பாலம் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நாகை நகரம் மற்றும் 29 -ஆவது வார்டுக்குள்பட்ட அக்கரைக்குளம் பகுதியை இணைக்கும் வகையில், தேவநதியின் குறுக்கே கட்டப்பட்ட பழைய பாலம் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த  பாலத்தை அக்கரைக்குளம், புத்தூர், செல்லூர், ஐவநல்லூர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த பாலமானது தற்போது பலமிழந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. பலமிழந்தும், சிதிலமடைந்தும் பாலத்தின் மையப் பகுதி கடந்த மாதம் திடீரென உள்வாங்கியது. இதனால் இந்த பாலத்தின் வழியாக எந்தவித வாகனங்களும் செல்ல முடியவில்லை. இருசக்கர வாகனங்களில் செல்வோரும், பாதசாரிகளும் ஒருவித அச்சத்துடனேயே பாலத்தைப் பயன்படுத்தும்  நிலை நீடித்து வருகிறது.
அக்கரைக்குளம் பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பள்ளி வாகனங்கள் செல்ல முடியவில்லை. அவசர காலங்களில் வாகன வசதி கிடைக்காமல் மாணவ, மாணவிகளும், பொதுமக்களும்  அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த பாலத்தின் வழியாகச் சென்று வந்த பள்ளி வாகனங்கள், சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள புத்தூர் ரவுண்டானா வரை சென்று, பின்னரே பிற பகுதிகளுக்கும், நகருக்குள்ளும் செல்ல வேண்டியுள்ளதால் கால விரயம் ஆவதாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதேபோல், அவசர கால ஊர்திகளும் குறிப்பிட்ட நேரத்துக்குள் அக்கரைக்குளம் பகுதிக்குள் செல்ல முடியாமல் போவதால் உயிரிழப்பு போன்ற பாதிப்புகள் தொடருவதாகவும் அப்பகுதி வாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.பழுதாகிய நிலையில் உள்ள தேவநதி பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலம் கட்டுவதற்கு நாகை மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அக்கரைக்குளம், செல்லூர், புத்தூர் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின்  எதிர்பார்ப்பாக உள்ளது.
நாகை அக்கரைக்குளம் பகுதியைச் சேர்ந்த குபேந்திரன் கூறியது : நாகை நகர் மற்றும் அக்கரைக்குளம் பகுதியை இணைக்கும் வகையில் தேவநதியின் குறுக்கே சுமார் 200 மீட்டர் இடைவெளி தூரத்தில் அருகருகே கட்டப்பட்டுள்ள இரண்டு பாலங்களும் பலமிழந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. பொதுமக்களின் அதிகப் பயன்பாட்டில் இருந்து வந்த பாலத்தின் ஒரு பகுதி திடீரென உள்வாங்கியதால் வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது. இதனால் அவசர கால ஊர்திகளின் சேவைகள் அக்கரைக்குளம் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு உரிய நேரத்தில் கிடைப்பதில்லை.
பழுதடைந்த நிலையில் உள்ள இந்த  பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டுவதற்கு நாகை மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அக்கரைக்குளத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்ய வந்திருந்த ஆட்சியரிடமும் இதுதொடர்பாக கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆட்சியரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி தெரிவித்துள்ளார் என்றார்.
நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் எம். பரணிகுமார் கூறியது: இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த பாலம் குறித்து தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்  ஓ.எஸ். மணியனின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவரது அறிவுறுத்தலின்படி, புதிய பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நாகை நகராட்சி பொறியாளர் கூறுகையில், அக்கரைக்குளம் பகுதியை இணைக்கும் வகையில் தேவநதியின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி வாழ் மக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், புதிய பாலம் கட்டுவதற்காக  ரூ. 2 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, அரசின் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரத்துறை) யிடம் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.
புதிய பாலம் கட்டுவதற்கான முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. புதிய பாலம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு பெறப்பட்டவுடன் பணிகள் விரைவில் தொடங்கப்படும். பொதுமக்களின் பயன்பாட்டை கருத்தில்கொண்டு, நகராட்சி சார்பில் பாலத்தில் தற்காலிக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டாச்சு... தண்ணீர் இல்லாமல் தெப்பத் திருவிழா நடைபெறுமா?

இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்

மண்டல அலுவலா்கள், பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான பயிற்சி கூட்டம்

பிரதமா் மோடி இன்று இஸ்ரேல் பயணம்!

புற்றுநோய் மரபணு வரைபடம்!

SCROLL FOR NEXT