முகப்பு
நாகப்பட்டினம்

ஊராட்சிதோறும் குறுவனம்: ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் சீரிய முயற்சி..

காவிரி டெல்டா முழுவதும் ஊராட்சிதோறும் குறுவனம் அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் அருள்நிதி ஆர். கைலாசம்.

Updated On : 20 ஜூலை, 2019 at 1:31 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 3:05 PM



காவிரி டெல்டா முழுவதும் ஊராட்சிதோறும் குறுவனம் அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் அருள்நிதி ஆர். கைலாசம்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர் அருள்நிதி ஆர். கைலாசம் (66). இவர் ராணுவத்தில் 1975-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து 1990-ஆம் ஆண்டு வரை 15 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
பத்தாம் வகுப்பு முடித்த நிலையில், தமிழ்நாடு காவல்துறையில் கிரேட் 1-இல் தேர்ச்சி பெற்றார். எனினும், பணியில் சேராமல் ராணுவத்துக்கு ஆள்கள் தேர்வு நடந்தபோது அதில் தேர்ச்சி பெற்று, ராணுவப் பயிற்சி வகுப்பில் இணைந்து 1976-இல் மேற்கு வங்கத்தில் ராணுவ கவச வாகனங்களில் டேங் கமாண்டராக பணியில் ஈடுபட்டார். மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பணியாற்றிய காலத்தில், மரக்கன்றுகளை ஆர்வத்துடன் நட்டு பராமரித்து வந்துள்ளார். 1990-இல் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, மன்னார்குடிக்கு குடிபெயர்ந்து குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.இந்நிலையில், நாளொன்றுக்கு குறைந்தது 5-லிருந்து 100 மரக்கன்றுகளாவது தனது சார்பில் நடப்படுவதாகக் கூறும் அவர், மரக்கன்றுகளை தனது காரிலேயே எடுத்துச் சென்று நடுவதாகவும், ஆர்வ மிகுதியில் மரக்கன்றுகளைக் கேட்பவர்களுக்கு கொடுப்பதில்லை என்றும், எங்கு நட வேண்டும் என ஆசைப்படுகிறார்களோ அந்த இடத்தில் தானே மரக்கன்றை நட்டு வைத்துவிடுவதாகவும் கூறுகிறார். 
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: இப்போதும் என்னிடம் மகிழம், வேம்பு, நாவல், பகோணியா, கொடுக்காப்புளி ஆகிய மழை தரும் மரக்கன்றுகள், சரக்கொல்லை, தாணிக்கா போன்ற அழிந்து வரும் அரிய மூலிகை மரக்கன்றுகள் உள்பட 10 ஆயிரம் மரக்கன்றுகள் உள்ளன. 
பசுமைக் கரங்கள் என்ற அமைப்பைத் தொடங்கி, அதிக அளவில் மரக்கன்றுகளை இருப்பு வைத்துக்கொள்ளவும், விதைகள் பதியம் போடவும், தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப மரக்கன்றுகளை உருவாக்க வசதியாக இயற்கை ஆர்வலர் வி. திவாகரன் முன்வந்து அனுமதி பெற்று தந்ததன் பயனாக, மன்னார்குடி நகரில் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ராஜவிநாயகர் கோயிலுக்குச் சொந்தமான 8 ஏக்கர் நிலத்தில் மூன்று ஏக்கர் அளவுக்கு சுத்தம் செய்து, அதில் மரக்கன்றுகளை வளர்த்து வருகிறேன். பல வகையான மரக்கன்றுகளை பணம் கொடுத்து வாங்கி வைத்துள்ளேன். இவை அனைத்தையும் எனது ஓய்வூதிய தொகையிலிருந்துதான் செய்து வருகிறேன்.
இதுநாள் வரை சுமார் 13 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளேன். இதில் குறைந்தது 8 ஆயிரம் மரக்கன்றுகளாவது நல்ல நிலையில் வளர்ந்து வருகின்றன. காவிரி டெல்டா மாவட்டமான ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளில் மக்களுக்கும், பறவைகளுக்கும் பயன்தரும் வகையிலும் இயற்கை வளத்தை பெருக்கும், மருத்துவ குணம் தரும் மரக்கன்றுகளை நட்டு மரங்களாக வளர்த்து அதிக எண்ணிக்கையில் குறு வனங்களை ஏற்படுத்த வேண்டும்.
இதைத் தனி மனிதனாலோ, ஓர் அமைப்பினாலோ செய்து விட முடியாது. தமிழக அரசால் மட்டுமே சாத்தியம். இதை அரசு செய்ய முன்வரும் வரை பசுமைக் கரங்கள் அமைப்பின் சார்பில் புதிய வனங்களை உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவோம். நாம் அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்வது வனம், வளம், பசுமையாக இருக்கட்டும் என தன்னம்பிக்கை மேலிடக் கூறுகிறார் அருள்நிதி ஆர். கைலாசம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.