நாகப்பட்டினம்

திட்டச்சேரி இந்தியன் வங்கி தரைத் தளத்துக்கு மாற்றப்படுமா?

DIN

திட்டச்சேரியில் மேல்தளத்தில் இயங்கி வரும் இந்தியன் வங்கியை வாடிக்கையாளர்களின் நலன் கருதி தரைத் தளத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
திருமருகல் ஒன்றியத்துக்குள்பட்ட திட்டச்சேரி காந்தி சாலையில் 1990 முதல் 2011-ஆம் ஆண்டு வரை தனியாருக்குச் சொந்தமான வாடகைக் கட்டடத்தின் தரைத் தளத்தில் இந்தியன் வங்கி இயங்கி வந்தது. பின்னர், திட்டச்சேரி பேருந்து நிலையம் அருகில் பேரூராட்சிக்குச் சொந்தமான கட்டடத்தின் மேல்தளத்துக்கு மாற்றப்பட்டு தற்போது வரை வாடகைக்கு இயங்கி வருகிறது. இந்த வங்கியில் திட்டச்சேரி, புறாகிராமம், கட்டுமாவடி, தண்டாளம், அகரக்கொந்தகை, வாழ்மங்களம், ஆலங்குடிச்சேரி, ஆலத்தூர், நாட்டார் மங்களம், மத்தியக்குடி, தேவங்குடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
திட்டச்சேரி, புறாகிராமம் ஆகிய பகுதிகளில் இஸ்லாமியர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் அதிகளவில் உள்ளன. தவிர திட்டச்சேரி பேரூராட்சி, ஊராட்சிகள், அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என அரசு சம்பந்தமான வங்கிக் கணக்குகள், மகளிர் சுய உதவிக் குழுவினரின் வங்கிக் கணக்குகளும் அதிக அளவில் உள்ளன. 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகள், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை பெறும் பயனாளிகள் மற்றும் ஓய்வுதியதாரர்கள் என பல தரப்பு மக்களும் இந்த வங்கியில் கணக்கு வைத்து வரவு செலவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியன் வங்கி பேரூராட்சிக்குச் சொந்தமான வாடகை கட்டடத்தின் மேல்தளத்தில் இயங்கி வருவதால் வாடிக்கையாளர்கள் மேல் தளத்துக்குச் சென்று வர மிகவும் சிரமப்படுவதாகவும், வங்கிப் படிக்கட்டுகளில் ஏறிச் சென்று வருவதற்கு ஏற்ற வகையில்  இல்லை எனவும், முதியோர்கள் மற்றும் உடல் நலக்குறைவு உள்ளவர்கள், மாற்றுத் திறனாளிகள் சென்று வர மிகவும் சிரமப்படுவதாக கூறப்படுகிறது. இதுதவிர, போதுமான இருக்கை வசதிகளும் இல்லை. எனவே, வங்கி வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கி அலுவலகத்தை தரைத் தளத்துக்கு மாற்றி அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க வங்கி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள், வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT