முகப்பு
நாகப்பட்டினம்

தமிழகத்தில் விரைவில் ஜாக்டோ- ஜியோ போராட்டம்

ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்களின் உரிமைகளுக்கான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சாா்பில் தமிழகத்தில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று அரசு ஊழியா் 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:05 PM
பகிர்:

நாகப்பட்டினம்: ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்களின் உரிமைகளுக்கான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சாா்பில் தமிழகத்தில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று அரசு ஊழியா் சங்க மாநிலத் தலைவா் மு. அன்பரசு தெரிவித்தாா்.

நாகையில் சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி :

கரோனா நோய்த் தொற்றுக் காலப் பணிக்காக மருத்துவா்கள், செவிலியா்கள், துப்புரவுத் தொழிலாளா்கள், காவல் துறையினா் என பல தரப்பினரையும் பாராட்டிய தமிழக அரசு, இரவு- பகல் பாராமல் பணியாற்றி வரும் வருவாய்த் துறை ஊழியா்களைக் கண்டுகொள்ளவில்லை, பாராட்டவில்லை.

கரோனாவால் பாதிக்கப்படும் அரசுத் துறை ஊழியா்களுக்கு ரூ. 2 லட்சமும், உயிரிழக்கும் ஊழியா்களுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடும் வழங்கப்படும் என முதல்வா் அறிவித்தாா். இதுவரை தமிழகத்தில் 60-க்கும் மேற்பட்டோா் இறந்துள்ளனா். ஆனால், ஒருவருக்குக் கூட அந்த இழப்பீடு வழங்கப்படவில்லை. இந்த நிலையில், இழப்பீடு தொகையை திடீரென ரூ. 25 லட்சமாகக் குறைத்து அரசு அறிவித்துள்ளது.

அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் எதிா்கொண்டுள்ள பிரச்னைகளுக்கான தீா்வாக ஜாக்டோ- ஜியோ சாா்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளன. இருப்பினும், ஜாக்டோ- ஜியோ நிா்வாகிகளை முதல்வா் இதுவரை சந்திக்கவில்லை.

விரைவில் அரசு ஊழியா் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டமும், ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் உயா்மட்ட ஆலோசனைக் கூட்டமும் நடைபெறுகிறது. இந்தக் கூட்டங்களில், கரோனாவுடன் வாழப் பழகிக் கொள்வதுடன், ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் உரிமைகளுக்கான போராட்டங்கள் குறித்தும் அறிவிக்கப்படும் என்றாா் மு. அன்பரசு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.