நாகப்பட்டினம்

நெடுஞ்சாலைத் துறை அலட்சியம்: சாலைப் பயணிகள் தடுமாற்றம்.

ஆர்.தினகரன்

மயிலாடுதுறையில் தவறான அறிவிப்பு பலகையை வைக்கும் நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியத்தால் சாலை வழியே பயணிப்போர் மிகுந்த தடுமாற்றத்திற்கு உள்ளாகின்றனர். 

மாநில மற்றும் மத்திய நெடுஞ்சாலைகளில், நெடுஞ்சாலைத்துறைச் சார்பாக ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் மற்றும் வழிகாட்டிப் பலகைகள் வைப்பது வழக்கம். அதேபோல திருவாரூர் மயிலாடுதுறை மாநில நெடுஞ்சாலையிலும் அறிவிப்புப் பலகைகள், பொதுமக்களுக்கான வழிகாட்டிப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான வழிகாட்டிப் பலகைகள், தவறான செய்திகளையும், வழிகளையும் தெரிவிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் நெடுஞ்சாலைத் துறைக்குத் தகவல் தெரிவித்தால் கூட நடவடிக்கை எடுப்பதில்லை என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
 
மயிலாடுதுறை திருவாரூர் சாலையில், திருவாரூருக்கு அருகே கங்களாஞ்சேரி என்ற கிராமம் உள்ளது, ஆனால் இந்த கிராமத்தின் அருகே நெடுஞ்சாலைத் துறையால் வடகண்டம் என்ற ஊர் பெயர் உள்ள பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பலகையில் அம்பு குறியீடோ, அந்த ஊருக்கான தூரத்தைக் குறிப்பிடும் தகவலோ இல்லை. அந்தத் தகவல் பலகை வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து மேற்கே 8 கிலோ மீட்டருக்கு அப்பால் வடகண்டம் என்ற ஊர் உள்ளது.

வடகண்டம் என்ற ஊர் திருவாரூர் கும்பகோணம் சாலையில் உள்ளது. இதனால் இப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பல்கலைக்கழகம், கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆகிய கல்வி நிலையங்களுக்கு வருகிற வெளிமாநில, வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். 


 
அதேபோல மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் உள்ள இஞ்சிகுடி என்ற கிராமத்தில், மெயின் ரோட்டில் ரயில்வே கேட் உள்ளது போன்ற தகவல் பலகை உள்ளது. ஆனால் ரயில்வே கேட் ஒதுக்குப்புறமாக, உட்புறம் உள்ள சந்துப்பகுதியில் தான் உள்ளது. மேலும் ஒவ்வொரு கிராமத்தின் துவக்கத்திலும், முடிவிலும் நிறுவப்பட வேண்டிய தகவல் பலகைகள் ஒரே இடத்தில் சாலையின் இருபுறமும் நிறுவப்பட்டுள்ளது.

ஒரு கிராமம் முடிகின்ற இடத்தில்  துவங்குவது போன்ற  தகவலை தெரிவிக்கும் வகையில் பலகைகள்  அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக வெளியூரிலிருந்து வருகின்ற சாலைப் பயணிகள், இது போன்ற தகவல் பலகைகள் மூலம் இடம் மாறி, ஊர் மாறி சில கிலோ மீட்டர்கள் தேவையில்லாமல் பயணித்துத் திரும்பி வர வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுபோன்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் அலட்சியத்தின் காரணமாக ஏற்பட்ட அவலங்களை, பொதுமக்கள் அனுபவிக்க வேண்டிய நிலையில் உள்ளது.

இது சம்பந்தமாக நெடுஞ்சாலைத் துறையில் பணிபுரியும் அலுவலர்களை விசாரித்தபோது ,  “நெடுஞ்சாலைத்துறையில் நடைபெறும் அனைத்து ஒப்பந்தப் பணிகளும் சென்னையிலிருந்து ஒப்பந்தப்புள்ளிகள் அளிக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. அதனால் அந்தந்த பகுதியில் பணியாற்றும் அலுவலர்கள் பணிகளை மேற்பார்வையிடுவது கிடையாது. அவ்வாறு ஒரு சில அதிகாரிகள் மேற்பார்வையிட்டு குறைகளைத் தெரிவித்தால் கூட ஒப்பந்தக்காரர்கள் சரிசெய்யாத நிலைமைதான் உள்ளது.” என தெரிவிக்கின்றனர்.

இது சம்பந்தமாக கொல்லுமாங்குடியைச் சேர்ந்த வசந்தபாலன் என்ற சமூக ஆர்வலர் தெரிவித்ததாவது,  ”இது போன்ற குறைகளை நாங்கள் பலமுறை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டோம். அவர்கள் குறைகளை நிவர்த்தி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.” என வேதனையுடன் தெரிவித்தார்.
 
இதேபோல திருவாரூர் மயிலாடுதுறை சாலையில், திருவாரூர் அருகில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் அதற்கான விதிமுறைகளுடன் அமைக்கப்படவில்லை. வேகத்தடைக்கும் சாலைக்கும் இடையில் சிறிய பள்ளம் இருக்கின்ற வகையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ ஐந்து வேகத்தடைகள் இதேபோல் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த வேகத்தடைகளை  இருசக்கர வாகனத்தில்  கடந்து செல்கின்ற வாகன ஓட்டிகள்  குறிப்பாக பெண்கள், வயதானவர்கள்  மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.

எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் அதிகாரிகள் தவறாக அமைக்கப்பட்டுள்ள தகவல் பலகைகளை சரி செய்திட வேண்டும். அதேபோல வேகத்தடைகளை நெறிமுறைகளுக்கு ஏற்ப அமைத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
 
 இஞ்சிக்குடி கிராமத்தில் ரயில்வே கேட் இல்லாத இடத்தில், ரயில்வே கேட் இருப்பதுபோன்ற தவறான தகவல் பலகை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT