முகப்பு
நாகப்பட்டினம்

ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய சேமிப்புக் கிடங்கை திறக்கக் கோரிக்கை

ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய சேமிப்புக் கிடங்கை உடனடியாகத் திறப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரியச் சேமிப்புக் கிடங்கு, கஜா புயலின் காரணமாக சேதமடைந்த நிலை.
பகிர்:

ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய சேமிப்புக் கிடங்கை உடனடியாகத் திறப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கா.இளவரி கோரிக்கை விடுத்துள்ளார். 

இது சம்பந்தமாக ஞாயிற்றுக்கிழமை அவர் தமிழக அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவித்துள்ளதாவது, டெல்டா மாவட்டங்களில் பிரதானத் தொழிலாக விவசாயம் விளங்கி வருகிறது. குறுவை, சம்பா, தாளடிப் போன்ற பருவங்களில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம், தமிழக அரசு ஓரு ஆண்டுக்கு மூன்று மாவட்டங்களில் மட்டும், 20 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு மேல் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

இவற்றைப் பாதுகாப்பாக சேமித்து வைத்து, பயன்படுத்தப் பெரிய அளவிலான சேமிப்புக் கிடங்கு வசதிகள் இல்லாத காரணத்தினால், பெரும்பாலான நெல் மூட்டைகள் திறந்த வெளியிலேயே சேமிக்கும்போது, இயற்கைச் சீற்றங்களால் வீணாகி வந்தன. இதனைக் கருத்தில்கொண்டு, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரியச் சேமிப்பு கிடங்காக, நாகை மாவட்டம் கோவில்பத்து கிராமத்தில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூபாய் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 175 ஏக்கர் பரப்பளவில் சேமிப்பு கிடங்கு கட்டப்படும் என அறிவித்தார்.

இதனையொட்டிக் கோவில்பத்து ஊராட்சிக்குச் சொந்தமான மீன்பாசி அலம் நிலம் ஒதுக்கப்பட்டு, ஒவ்வொரு சேமிப்பு கிடங்கும் தலா 50 லட்சம் கிலோ கொள்ளளவில் சேமிக்கக் கூடிய வசதியுடன் 15 சேமிப்புக்கிடங்குகள், திருச்சித் தேசிய தொழில்நுட்பக்கல்லூரி வழிகாட்டுதலின்படி, மூன்று தனியார் நிறுவனங்களால் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. கட்டுமானப் பணிகள் நடைபெறும்போதே, கட்டுமானப் பணிக்கு உப்புநீர் பயன்படுத்தப்படுவதாக விவசாயிகள் மத்தியிலும், தொழிலாளர்கள் மத்தியிலும் குற்றச்சாற்று எழுந்தது. 

இந்தக் குற்றச்சாட்டை உண்மை என நிரூபிக்கும் வகையில், சேமிப்புக் கிடங்கின் கட்டுமானப் பணி முடிந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலின் போது, இந்த கிடங்கு முற்றிலும் உருக்குலைந்து, சின்னாபின்னமானது. அதனைத் தொடர்ந்து, தற்போது மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது.

தொடர்ந்து டெல்டா மாவட்டங்களை இயற்கை சீற்றங்கள் அச்சுறுத்தி வரும் நிலையில், இப்பகுதியில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாத்திட, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பத்தின் பேரில், ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய அளவில் கட்டிமுடிக்கப்பட்ட இந்த சேமிப்புக் கிடங்கைத் தமிழக அரசு விரைவில் திறந்திடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக உணவுத்துறை அமைச்சரையும், தமிழக முதல்வரையும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர் சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →