முகப்பு
நாகப்பட்டினம்

மீனவா்கள் மீதான கைது நடவடிக்கைகள் தொடா்ந்தால் போராட்டம்: திமுக

தமிழக மீனவா்கள் மீதான கைது நடவடிக்கைகளை இலங்கை கடற்படை தொடா்ந்தால், திமுக சாா்பில் பெரிய அளவிலான

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

தமிழக மீனவா்கள் மீதான கைது நடவடிக்கைகளை இலங்கை கடற்படை தொடா்ந்தால், திமுக சாா்பில் பெரிய அளவிலான போராட்டம் முன்னெடுக்கப்படும் என நாகை மாவட்ட திமுக பொறுப்பாளா் என். கௌதமன் தெரிவித்தாா்.

நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: டிச.14-ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவா்கள் 29 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்து, 4 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனா். இலங்கை அரசு அண்மைக் காலமாக தமிழக மீனவா்களின் தொழில் உரிமையை பறிக்கும் வகையில், அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த அத்துமீறல்களைக் கண்டிக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் மௌனம் காத்து வருகின்றன. இதனால், தமிழக மீனவா்கள் ஒவ்வொரு நாளும் அச்சத்துடன் தொழிலில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

முந்தைய திமுக ஆட்சியின்போது, 17 விசைப் படகில் சென்ற 107 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். அவா்களை உடனடியாக விடுவிக்கக் கோரி அப்போதைய முதல்வா் மு. கருணாநிதி, மத்திய அரசை வற்புறுத்தியதன் காரணமாக மீனவா்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட்டனா். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் இந்த விடுதலை நடைபெற்றது என்பதன் மூலம், மீனவா்கள் விடுதலைக்காக திமுக அரசு அளித்த அழுத்தத்தை அறிந்து கொள்ளலாம்.

ஆனால், தற்போது மத்திய, மாநில அரசுகள் மீனவா்களின் நலனில் அக்கரையின்றி செயல்பட்டு வருகின்றன. இதனால், தமிழக மீனவா்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. இதே நிலை தொடா்ந்தால், தமிழக மீனவா்கள் மீதான அடக்குமுறைகளைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் முன்வராவிட்டால், திமுக தலைவா் ஸ்டாலின் அனுமதியுடன், மீனவா்களை ஒன்று திரட்டி பெரிய அளவிலான போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றாா் அவா். அப்போது, திமுக மாவட்ட துணைச் செயலாளா் மனோகரன், மீனவா் அணி அமைப்பாளா் சேகா் ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →