சீர்காழி அருகே 2 வாரமாக வடியாத மழை நீர்: மக்கள் அவதி
சீர்காழி அருகே கூத்தியம் பேட்டை ஊராட்சி காமுடிகோயில் தெரு பகுதியில் உள்ள குடிசை வீடுகளை கடந்த இரண்டு வார காலமாக மழை நீர் சூழ்ந்து உள்ளது.
நாகை மாவட்டம், சீர்காழி அருகே கூத்தியம் பேட்டை ஊராட்சி காமுடிகோயில் தெரு பகுதியில் உள்ள குடிசை வீடுகளை கடந்த இரண்டு வார காலமாக மழை நீர் சூழ்ந்து உள்ளது. எனவே இப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் மழை நீர் சூழ்ந்த உள்ளதனால் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
மேலும் அந்த கிராமத்தின் அருகில் உள்ள தென் திருப்பதி என்று அழைக்கப்படும் பெருமாள் கோயிலில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த கோயிலுக்கு பக்தர்கள் செல்ல முடியாத நிலையுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, கொள்ளிட ஒன்றியம் கூத்தியம்பேட்டை, காமுட்டி கோயில் தெருவில் கன மழை பெய்த காரணத்தால் கடந்த இரண்டு வாரங்களாக மழை நீர் தேங்கி கிடக்கிறது.
ஆடு ஒன்றும் இறந்து விட்டது. அப்பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்குள் பாம்பு, பூரான், மற்றும் நச்சு பூச்சிகள் வீட்டிற்குள் நுழைந்து வருகின்றன. இதனால் மிகவும் சிரமம் அடைந்து உள்ளோம்.
இதுவரை ஊராட்சி நிர்வாகம் சார்பில் இதுவரை தண்ணீர் வடிய வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. எனவே இப்பகுதி மக்கள் நலன் கருதி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மழைநீர் வடிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.