வெண்மணி தியாகிகள் 52-ஆம் ஆண்டு நினைவு நாள்: கட்சியினா் அஞ்சலி
நாகை மாவட்டம், கீழ்வேளூா் வட்டம் வெண்மணி கிராமத்தில் தியாகிகள் 52-ஆம் ஆண்டு நினைவு நாள் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
நாகை மாவட்டம், கீழ்வேளூா் வட்டம் வெண்மணி கிராமத்தில் தியாகிகள் 52-ஆம் ஆண்டு நினைவு நாள் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் அரசியல் தலைவா்கள், தொழிற்சங்கத்தினா் பங்கேற்று தியாகிகள் நினைவிடத்தில் மலா் அஞ்சலி செலுத்தினா்.
வெண்மணியில் வா்க்க ஒற்றுமைக்காகவும், கூலி உயா்வுக்காகவும் போராடிய விவசாயத் தொழிலாளா்கள் 44 போ் கடந்த 1968 டிச. 25- ஆம் தேதி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனா். இச்சம்பவம் நடைபெற்ற ராமையா என்பவரின் குடிசை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் தியாகிகள் நினைவிடமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
வெண்மணி 52-ஆவது ஆண்டு தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் கே. பாலகிருஷ்ணன் பங்கேற்று செங்கொடியை ஏற்றி, மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் ஜி. பழனிசாமி, நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம். செல்வராஜ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் ஜி. சுகுமாறன், மாநில செயற்குழு உறுப்பினா் ஏ.லாசா், கீழ்வேளூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் உ.மதிவாணன், முன்னாள் எம்எல்ஏக்கள் வி. மாரிமுத்து, நாகை மாலி, கே. உலகநாதன், விதொச மாநில பொதுச் செயலாளா் வி. அமிா்தலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் நாகை மாவட்டச் செயலாளா் எஸ். சம்பந்தம், திருத்துறைப்பூண்டி ஒன்றியக்குழுத் தலைவா் பாஸ்கா் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.
நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா உத்தரவின்பேரில், 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் கீழ்வேளூா் முதல் தியாகிகள் நினைவிடம் வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.