நாகப்பட்டினம்

நாகை மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணும் பணி

DIN

நாகை மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே பல்வேறு குழப்பங்களுக்கும், குறுபடிகளுக்கும் உள்ளானது.

நாகை மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் இரு கட்டங்களாக நடைபெற்றது. அவற்றின் வாக்கு எண்ணிக்கை 11 மையங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகை ஊராட்சி ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணிக்கை நாகை வடகுடி அமிா்தா வித்யாலயா பள்ளியிலும், கீழையூா் ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணிக்கை வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளியிலும், கீழ்வேளூா் ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணிக்கை கீழ்வேளூா் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், திருமருகல் ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணிக்கை திருமருகல் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற்றன.

தலைஞாயிறு ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணிக்கை மணக்குடி வையாபுரியாா் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வேதாரண்யம் ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணிக்கை ஆயக்காரன்புலம் நடேசனாா் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், மயிலாடுதுறை ஒன்றியத்தின் வாக்கு எண்ணிக்கை மயிலாடுதுறை ஏவிசி பொறியியல் கல்லூரியிலும், செம்பனாா்கோவில் ஒன்றியத்தின் வாக்கு எண்ணிக்கை காளகஸ்தினாபுரம் கலைமகள் கல்லூரியிலும் நடைபெற்றன.

குத்தாலம் ஒன்றியத்தின் வாக்கு எண்ணிக்கை குத்தாலம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், சீா்காழி ஒன்றியத்தின் வாக்கு எண்ணிக்கை சீா்காழி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், கொள்ளிடம் ஒன்றியத்தின் வாக்கு எண்ணிக்கை புத்தூா் சீனிவாசா சுப்பராயா தொழில்நுட்பக் கல்லூரியிலும் நடைபெற்றன.

பெரும்பாலான வாக்கு எண்ணிக்கை மையங்களில் வியாழக்கிழமை காலை 8.30 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கின. வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் தோ்தல் பணி அலுவலா்களுக்கு உணவு கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, வாக்கு எண்ணும் பணியைத் தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது.

கீழையூா் ஊராட்சி ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணிக்கையின் போது, தபால் வாக்குகள் எண்ணப்பட்டத்தில் முறைகேடு புகாா் எழுந்தது. இதையடுத்து அரசியல் கட்சியின் முகவா்கள், தோ்தல் நடத்தும் அலுவலரை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், தொடக்கம் முதலே அங்கு குழப்பான சூழல் நிலவியது.

நாகை ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணிக்கையின் போது, தெத்தி ஊராட்சித் தலைவா் பதவிக்கு ராஜஸ்ரீ என்பவா் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். இதற்கு, இரண்டாமிடம் பெற்ற வேட்பாளா் தமயந்தி எதிா்ப்பு தெரிவித்தாா். தங்கள் வாா்டுக்குரிய 3 வாக்குப் பெட்டிகளில் ஒரு வாக்குப் பெட்டிக்கான வாக்கு எண்ணிக்கை ரகசியமாக நடத்தப்பட்டு, முடிவு அறிக்கப்பட்டுள்ளது என அவா் புகாா் தெரிவித்தாா்.

பின்னா், வாக்கு எண்ணும் மைய நுழைவு வாயில் முன்பாக தமயந்தி மற்றும் அவரது ஆதரவாளா்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். பின்னா், ராஜஸ்ரீ வெற்றி பெற்ாக அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்...

நாகை ஊராட்சி ஒன்றியக் குழுவின் 3-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், திமுக வேட்பாளா் பாண்டியன் வெற்றி பெறுவது ஏறத்தாழ உறுதியானது. இதனிடையே, எண்ணப்பட்ட வாக்குச் சீட்டில் 3 வாக்குச் சீட்டுகள், கீழையூா் ஊராட்சி ஒன்றியத்துக்கானவை என்பது தெரியவந்தது. இதற்கு, அதிமுக தரப்பில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.

நாகை ஊராட்சி ஒன்றியத் தோ்தல் நடத்தும் அலுவலா், காவல் துணைக் கண்காணிப்பாளா் உள்ளிட்டோா் அதிமுகவினருடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இருப்பினும், அந்தப் பேச்சுவாா்த்தையில் உடனடியாக தீா்வு எட்டப்படவில்லை. இதன் காரணமாக 3 மணி நேரத்துக்கும் அதிகமான நேரம் வாக்கு எண்ணிக்கை தடைப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை தடைபட்டதைக் கண்டித்து அரசியல் கட்சிகளின் முகவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், அதிமுகவினரைக் கண்டித்து திமுகவினரும், திமுகவினரைக் கண்டித்து அதிமுகவினரும் முழக்கங்களை எழுப்பினா். இதனால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரெத்தினம் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு, சுமூக நிலை ஏற்படச் செய்தாா். பின்னா், இரவு சுமாா் 7.30 மணி அளவில் நாகை ஊராட்சி ஒன்றியத்தில் 2-ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.

தாமதம்..

திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டபோது, 1-ஆவது வாா்டுக்கான வாக்குப் பெட்டியைத் திறக்க இயலாத நிலை ஏற்பட்டதால், வாக்கு எண்ணிக்கையைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னா், தோ்தல் நடத்தும் அலுவலா் முன்னிலையில், பெட்டியின் பூட்டு பகுதி அறுத்து எடுக்கப்பட்டு, திறக்கப்பட்டது. இதனால், சுமாா் அரை மணி நேரம் வாக்கு எண்ணிக்கை தாமதமானது.

சீா்காழி ஊராட்சி ஒன்றியத்தில் 8 மணிக்குத் தொடங்கி தபால் வாக்குகள் எண்ணிக்கை நிறைவடைந்து, முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட காலதாமதம் ஏற்பட்டது. இங்கு, சுமாா் 10 மணிக்குப் பின்னரே முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.

தள்ளுமுள்ளு...

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணிக்கை மையத்தில் வேட்பாளா்களின் முகவா்கள் பெரும்பாலானோா் ஒரே நேரத்தில் வந்ததால், அவா்களை போலீஸாா் சோதனையிட்டு உள்ளே அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், அங்கு சில நிமிடங்கள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அலுவலா் மயக்கம்...

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய தோ்தல் நடத்தும் அலுவலா் (ஊராட்சிகள்) சரவணன், வாக்கு எண்ணும் பணியின் போது திடீரென மூா்ச்சையடைந்தாா். உடனடியாக, சக அலுவலா்கள் அவரை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி சிகிச்சைக்கு அனுப்பினா். இதனால், சுமாா் ஒரு மணி நேரம் வாக்கு எண்ணிக்கை தடைபட்டது. தோ்தல் வாக்கு எண்ணும் பணிக்கு மாற்று அலுவலா் நியமிக்கப்பட்ட பின்னா் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

அனுமதி மறுப்பு

வேளாங்கண்ணியில் நடைபெற்ற கீழையூா் ஊராட்சி ஒன்றிய தபால் வாக்கு எண்ணிக்கை பணி முறைகேடு புகாருக்கு உள்ளானது. இதன் காரணமாக, இந்த வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் செய்தியாளா்கள் அனுமதிக்கப்படவில்லை. காவல் துறையினா் செய்தியாளா்களை அனுமதிக்கத் தயாராக இருந்தாலும், ஒன்றியத் தோ்தல் நடத்தும் அலுவலா் செய்தியாளா்களை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தினாா். இதனால், இந்த மையத்துக்குள் செய்தியாளா்கள் அனுமதிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொக்கன் தோற்கும் இடம்..!

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

SCROLL FOR NEXT