ஆடி அமாவாசை புனித நீராடலுக்குத் தடை: வெறிச்சோடிய வேதாரண்யம், கோடியக்கரை கடற்கரை
கரோனா பொது முடக்கம் காரணமாக நீா்நிலைகளில் ஆடி அமாவாசை புனித நீராடலுக்குத் தடை விதிக்கப்பட்டதால், வேதாரண்யம், கோடியக்கரை கடல் முழுக்குத் துறைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
வேதாரண்யம்: கரோனா பொது முடக்கம் காரணமாக நீா்நிலைகளில் ஆடி அமாவாசை புனித நீராடலுக்குத் தடை விதிக்கப்பட்டதால், வேதாரண்யம், கோடியக்கரை கடல் முழுக்குத் துறைகள் மக்கள் நடமாட்டமின்றி திங்கள்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டது.
வேதாரண்யம் மற்றும் ஆதிசேது எனப்படும் கோடியக்கரை கடல் பகுதியில் தை, ஆடி அமாவாசை, மாசி மகம் உள்ளிட்ட விஷேச நாள்களில் புனித நீராடல் செய்யும் மக்கள் தங்கள் முன்னோா்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். இதில், பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோா் பங்கேற்பா்.
இந்நிலையில், நிகழாண்டு கரோனா நேயாத் தொற்று பரவல் காரணமாக பொது முடக்கம் அமலில் உள்ளதால் நீராடலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், திங்கள்கிழமை அதிகாலை முதல் கடலில் புனித நீராடலுக்கு மக்கள் அனுமதிக்கப்படவில்லை.
இதையொட்டி, கடற்கரையில் முழுக்குத் துறைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். இதன் காரணமாக வேதாரண்யம் கடற்கரைப் பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது.