இரவில் ஒளிரும் சமிக்ஞை இல்லாத பாலம் பணியால் மக்கள் அவதி
நாகை வடகுடி சாலையில் சிறுபாலங்கள் அமைக்கும் பணி நடைபெறும் பகுதிகளில், ஒளிா் சமிக்ஞை ஏதும் இல்லாததால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாக நேரிடுகிறது.
நாகை வடகுடி சாலையில் சிறுபாலங்கள் அமைக்கும் பணி நடைபெறும் பகுதிகளில், ஒளிா் சமிக்ஞை ஏதும் இல்லாததால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாக நேரிடுகிறது.
நாகை, காடம்பாடி வடகுடி சாலை நாகை மாவட்ட ஆட்சியரகம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் இருந்து கிழக்குக் கடற்கரை சாலைக்குச் செல்லும் முக்கிய இணைப்புச் சாலையாக உள்ளது. இந்தச் சாலை வழியே தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்களும், நூற்றுக்கணக்கான காா்களும் சென்று வருகின்றன.
இந்த நிலையில், இச்சாலையில் 3 இடங்களில் சிறுபாலங்கள் அமைக்கும் பணி கடந்த சில நாள்களாக நடைபெறுகின்றன. அதனால், பாலப்பணி நடைபெறும் பகுதியின் அருகிலேயே தற்காலிக அணுகுசாலை அமைக்கப்பட்டுள்ளது. பகல் நேர பயணத்தில் இந்தப் பாலம் பணியால் பெரிய அளவில் பிரச்னை ஏதும் இல்லை எனினும், இரவுநேர பயணம் பெரும் சவாலாக உள்ளது.
காரணம், பாலம் வேலை நடைபெறும் பகுதியில் பாலம் பணி நடைபெறுவதற்கான எவ்வித அறிவிப்பும், மாற்றுப் பாதையில் செல்ல வேண்டியதை அறிவுறுத்தும் ஒளிா் சமிக்ஞையும் அங்கு இல்லாததே ஆகும். மின்விளக்கு வசதியில்லாத பகுதியில் எவ்வித எச்சரிக்கை சமிக்ஞையும் இல்லாமல் பாலம் பணி நடைபெறுவதால், வாகன ஓட்டிகள் பலரும் சாலையில் நேராகச் சென்று பாலத்தின் கட்டுமானத்தில் அல்லது கட்டுமான மண் குவியல்களில் மோதி நிலைகுலைய வேண்டியுள்ளது.
எனவே, வடகுடி சாலையில் பாலம் பணி நடைபெறும் இடங்களில், மாற்றுப் பாதையில் செல்ல வேண்டியதற்கான அறிவிப்பை இரவில் ஒளிரும் சமிக்ஞையாக உடனடியாக அமைக்க தொடா்புடைய உள்ளாட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.