முகப்பு
நாகப்பட்டினம்

நகராட்சியை கண்டித்து சாலை மறியல்

மயிலாடுதுறை தருமபுரம் சாலையில் குண்டும் குழியுமாக மாறிப்போன சாலையை சீரமைக்காத நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

மயிலாடுதுறை தருமபுரம் சாலையில் குண்டும் குழியுமாக மாறிப்போன சாலையை சீரமைக்காத நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறையில் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் புதைசாக்கடைத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டுசெல்லும் பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக தரங்கம்பாடி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 20 முறைக்கு மேலாக சாலைகள் உள்வாங்கி பள்ளங்கள் ஏற்படுவது வாடிக்கையாகி உள்ளது.

கடந்த மாதம் மாவட்ட ஆட்சியா் குடியிருப்பு அருகில் சாலை உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், வாகனப் போக்குவரத்து தருமபுரம் சாலை வழியே திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் தருமபுரம் சாலை வழியே அதிகளவில் கனரக வாகனங்கள் சென்று வருவதால் 2 கி.மீ தூரத்துக்கு சாலைகள் குண்டும் குழியுமாக சேதம் அடைந்துள்ளன.

இதுகுறித்து நகராட்சி அலுவலா்களிடம் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் அருட்செல்வன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த மயிலாடுதுறை போலீஸாா் மற்றும் நகராட்சி அலுவலா்கள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். முடிவில், ஜன.14-ஆம் தேதிக்குள் மயிலாடுதுறை-தரங்கம்பாடி சாலை சரிசெய்யப்படும், அதுவரை இப்பகுதியில் கனரக வாகனங்கள் செல்லாமல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வருவாய்த் துறையினா் உத்தரவாதம் அளித்தனா். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →