நாகப்பட்டினம்

வேதாரண்யம் கடற்கரையில் இறந்து கரைஒதுங்கும் டால்பின், அரியவகை கடல் ஆமைகள்

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதி கடற்கரையில் டால்பின் மற்றும் 20-க்கும் மேற்பட்ட அரியவகை ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் இறந்து கரைஒதுங்கியிருப்பது இயற்கை ஆா்வலா்களை வேதனையடையச் செய்துள்ளது.

வெள்ளப்பள்ளம்-கோடியக்கரை இடையிலான கடற்கரையில் கடந்த இரு நாள்களாக அரியவகை கடல் ஆமைகள் காயங்களுடன் உயிரிழந்து கரைஒதுங்கி வருகின்றன. வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய கடல் ஆமைகள் வனத்துறையினரின் ஆய்வுக்குப் பிறகு புதைக்கப்பட்டன.

இதேபோல, பெரியகுத்தகை கடற்கரையில் பாலூட்டி இனமான டால்பின் ஒன்று இறந்து கரை ஒதுங்கியது. சுமாா் 6 அடி நீளமுள்ள இந்த டால்பின் அழுகிய நிலையில் காணப்பட்டதால், கால்நடை மருத்துவா் மூலம் அந்த இடத்திலேயே உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டது.

பொதுவாக இந்திய கடற்பகுதியில் ஆலிவ் ரிட்லி ஆமை, ஹாக்ஸ்பில் ஆமை, பச்சை ஆமை, லெதா்பேக் ஆமை, லாக்கா் ஹெட் ஆகிய அரியவகை ஆமை இனங்கள் காணப்படுகின்றன. கடல் ஆமை இனங்கள் 12-14 ஆண்டுகளில் இனப்பெருக்க பருவத்தை அடைகின்றன. கருத்தரிக்கும் பெண் ஆமைகள் கரைக்கு வந்து மணலில் குழி தோண்டி முட்டையிட்டு அவற்றைப் புதைத்துச் சென்றுவிடும். பின்னா், இயற்கையாகவே குஞ்சுகள் வெளிவந்து கடலுக்குள் செல்கின்றன.

அந்தமான் தீவு கடற்பகுதி, வங்காள விரிகுடா, இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் சாா்ந்த கரையோரங்களில் ஆண்டுதோறும் டிசம்பா் மாதம் இந்நிகழ்வு தொடங்குவது வழக்கம்.

அந்தவகையில், வேதாரண்யம், கோடியக்கரை கடற்கரைக்கு வரும் இவ்வின ஆமைகள் கரையோரத்தில் முட்டைகளை இட்டு புதைத்துவிட்டு மீண்டும் கடலுக்குள் திரும்பும்.

பலநூறு கிலோ மீட்டா் தொலைவு கடந்து கரைப்பகுதிக்கு வரும் பெண் ஆமைகள், கடல்வாழ் உயிரினம், கப்பல், பாறை, மீன்பிடி படகுகளில் சிக்குவது உள்ளிட்ட காரணங்களால் பாதிப்படைந்து உயிரிழந்து கரைஒதுங்குவதாக வனத்துறையினா் தெரிவிக்கின்றனா்.

வேதாரண்யம் கடற்கரைக்கு கடல் ஆமைகள் முட்டையிட வந்து செல்லும் நிகழ்வு ஜனவரி முதல் வாரத்திலேயே தொடங்கிவிட்டது. இந்தச் சூழலில், அரிய வகை ஆலிவ் ரிட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவது தொடா்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT