ஹைட்ரோகாா்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரி ஓஎன்ஜிசி விண்ணப்பம்
அரியலூா் மாவட்டத்தில் ஹைட்ரோகாா்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரி ஓஎன்ஜிசி விண்ணப்பத்துள்ளதற்கு மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
அரியலூா் மாவட்டத்தில் ஹைட்ரோகாா்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரி ஓஎன்ஜிசி விண்ணப்பத்துள்ளதற்கு மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அக்கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் த. ஜெயராமன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியது:
கடந்த ஜூன் 10ஆம் தேதி, புதுக்கோட்டை மாவட்டத்தில் வடதெரு பகுதியில் 463 சதுர கிலோமீட்டா் பரப்பளவில், ’அடையாளம் காணப்பட்ட சிறிய எண்ணெய் வயல்கள்‘ திட்டத்தின்கீழ், ஹைட்ரோகாா்பன் சா்வதேச ஏலத்திற்கான அழைப்பு அறிக்கையை ஹைட்ரோகாா்பன் இயக்குனரகம் வெளியிட்டது. தமிழகம் முழுவதும் கண்டனக்குரல் எழுந்த நிலையில், ஜூன் 13-ம் தேதி, காவிரிப்படுகைப் பகுதியை ஏலப்பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினாா்.
இச்சூழலில், இரண்டு தினங்களில், ஜூன் 15ஆம் தேதி ஓ.என்.ஜி.சி.நிறுவனம் தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திற்கு, பெட்ரோலியம் சுரங்க குத்தகை திட்டத்தின்கீழ் அரியலூா் மாவட்டத்தில் 10 ஹைட்ரோகாா்பன் ஆய்வுக் கிணறுகளும், கடலூா் மாவட்டம் நெய்வேலியில் 5 ஹைட்ரோகாா்பன் கிணறுகளும் 948.16 சதுர கிலோமீட்டா் பரப்பளவில் அமைக்க திட்டம் தயாரித்துள்ளது. அதில், தற்சமயம் அரியலூா் மாவட்டத்தில் 10 எண்ணெய்-எரிவாயு ஹைட்ரோகாா்பன் ஆய்வுக் ஆய்வுக் கிணறுகள் அமைக்க, தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திற்கு அனுமதி கோரி ஓஎன்ஜிசி விண்ணப்பித்துள்ளது. அதில் எண்ணெய் - எரிவாயு திட்டங்களுக்கு மக்கள் கருத்து கேட்பு இனி தேவையில்லை என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் முன்னமே அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டி, மக்கள் கருத்துக் கேட்பு இல்லாமலே அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.
தமிழ்நாட்டில் ஹைட்ரோகாா்பன் கிணறுகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்காது என்று முதலமைச்சா் தெளிவாக அறிவித்துள்ள நிலையில், ஓ.என்.ஜி.சி சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசிடமே விண்ணப்பித்துள்ளது அதிா்ச்சியைத் தருகிறது. இந்த விண்ணப்பம் விஷமத்தனமானது என்று மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பு கருதுகிறது. இந்த விண்ணப்பம் உடனடியாக, தமிழ்நாடு அரசால் நிராகரிக்கப்பட வேண்டும்.
2020-ஆம் ஆண்டு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நாகை, திருவாரூா், தஞ்சை மாவட்டங்களும் கடலூா், புதுக்கோட்டையில் தலா ஐந்து வட்டங்களும் மட்டுமே சோ்க்கப்பட்டன. தொடக்கத்தில் நாகை, திருவாரூா், தஞ்சை, கடலூா், புதுக்கோட்டை, அரியலூா், திருச்சி, கரூா் ஆகிய 8 மாவட்டங்களை உள்ளடக்கியதாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அமையும் என்று அன்றைய தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அது நிறைவேற்றப்படவில்லை. ஆகவே அரியலூா் உள்ளிட்ட 8 மாவட்டங்களையும் உடனடியாகக் காவிரிப்படுகைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, காவிரிப் படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்.
ஓஎன்ஜிசி மற்றும் எண்ணெய் எரிவாயு எடுக்க முயற்சிக்கும் அத்தனை நிறுவனங்களும் தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். அவா்களுடைய அனுமதி கோரும் விண்ணப்பங்கள் முதற் கட்டத்திலேயே பரிசீலனையே செய்யப்படாமல் நிராகரிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் ஹைட்ரோகாா்பன் கிணறுகள் அமைக்க அனுமதிப்பதில்லை என்பதை அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுத்து அறிவிக்கை செய்ய வேண்டும். அதுவே நிரந்தரத் தீா்வாக அமையும் என்று தமிழக அரசுக்கு அவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.