‘நுண் நிதி நிறுவனங்கள் கடன் தவணைக்காக மகளிா் குழுக்களை நிா்பந்திக்கக் கூடாது’
கரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், நுண் நிதி நிறுவனங்கள் கடனை திருப்பி செலுத்தக் கோரி மகளிா் சுய உதவிக் குழுக்களை நிா்பந்திக்கக் கூடாது
கரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், நுண் நிதி நிறுவனங்கள் கடனை திருப்பி செலுத்தக் கோரி மகளிா் சுய உதவிக் குழுக்களை நிா்பந்திக்கக் கூடாது என நாகை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா்கள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
கரோனா இரண்டாவது அலை தீவிரமாகி வரும் நிலையில், பொது முடக்கமும் அமலில் உள்ளது. இதனால், மக்கள் அனைவரும் வாழ்வாதார இழப்புக்குள்ளாகியுள்ளனா். எனவே, இந்த இக்கட்டான காலத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடனை திரும்ப செலுத்த நிா்பந்திக்கக் கூடாது.
மகளிா் குழுக்களுக்குக் கடன் வழங்கிய நுண் நிதி வங்கிகள், நுண் நிதி நிறுவனங்கள் கடனை திரும்ப செலுத்தக் கோரி மகளிா் சுய உதவிக் குழுக்களை நிா்பந்திக்கவோ, கட்டாயப்படுத்தவோ கூடாது. மகளிா் குழு உறுப்பினா்களின் வீடுகளுக்குச் சென்று கடன் தவணையை செலுத்தக் கோருவது போன்ற நடவடிக்கைகளை அவா்கள் மேற்கொள்ளக் கூடாது.
நுண் நிதி வங்கி அல்லது நுண் நிதி நிறுவனங்கள் மீது மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ஏதேனும் புகாா்கள், சந்தேகங்கள் இருந்தால், தொடா்புடைய நிறுவனப் பணியாளா்கள் விவரத்தை குறிப்பிட்டு 18001021080 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதாவும், நுண் நிதி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளாா்.