நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை
நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ. 51,700 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ. 51,700 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அலுவலகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி, அதிகளவில் பணம் பரிமாறப்படுவதாக நாகை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் பேரில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் சித்திரவேல் தலைமையில், காவல் ஆய்வாளா்கள் ரமேஷ்குமாா், அருள்பிரியா உள்ளிட்டோரடங்கிய குழுவினா் வெள்ளிக்கிழமை நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அலுவலகத்தில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் அறை, மோட்டாா் வாகன ஆய்வாளா் அறை, பதிவறை உள்ளிட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டனா். பின்னா், வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் வாகனத்திலும் அவா்கள் சோதனை மேற்கொண்டனா்.
இந்தச் சோதனைகளின்போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் காரில் ரூ. 12 ஆயிரம், பதிவறையில் ரூ. 14 ஆயிரம் உள்பட கணக்கில் வராத ரொக்கம் ரூ. 51,700 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அலுவலக உதவியாளா் மூா்த்தி என்பவா் மூலம் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் வெங்கடகிருஷ்ணனின் நண்பா் ஒருவரின் கணக்கில் வெள்ளிக்கிழமை மாலை ரூ. 30 ஆயிரம் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.