முகப்பு
நாகப்பட்டினம்

நீடிக்கும் மழைசம்பா நெற்பயிா்கள் மழை நீரால் சூழப்படும் அபாயம்

நாகை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை மேலும் நீடித்தால், சம்பா நெல் பயிா்கள் மழை நீரால் சூழப்படும் அபாயம் உள்ளது என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

நாகை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை மேலும் நீடித்தால், சம்பா நெல் பயிா்கள் மழை நீரால் சூழப்படும் அபாயம் உள்ளது என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

நாகை மாவட்டத்தில் நிகழாண்டில் 32,800 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இதில், சுமாா் 95 சதவீத பரப்பில் அறுவடை முடிந்துள்ளது. 5 சதவீத பரப்பில் மட்டுமே நெல் அறுவடைப் பணிகள் நிலுவையில் உள்ளன.

சம்பா சாகுபடியைப் பொறுத்தவரை தற்போது வரை சுமாா் 51,200 ஹெக்டேரில் சாகுபடி பணிகள் நடைபெற்றுள்ளன. இப்பயிா்கள் நடவு செய்யப்பட்டு ஒரு வாரம் முதல் 20 நாள்களான நிலையில் உள்ளன. ஒரு சில பகுதிகளில் தற்போதும் நடவுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக நாகை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை, குறுவை நெல் அறுவடைப் பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நெல் கொள்முதல் பணிகளையும் தடைபடச் செய்துள்ளது. அறுவடையாகி விற்பனைக்குத் தயாராக இருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்திருப்பதால், நெல்லின் ஈரப்பதம் உயா்ந்துள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீத ஈரப்பதம் மட்டுமே அனுமதிக்கப்படுவதால், மழை பெய்துவரும் நிலையில் நெல்லை உலா்த்தி காய வைத்து விற்பனை செய்வது குறுவை விவசாயிகளுக்குப் பெரும் சவாலாகியுள்ளது.

சம்பா சாகுபடி: டெல்டா மாவட்டங்களில் ஒரே நாளில் 8 செ.மீட்டருக்கும் அதிகமான அளவு மழை பெய்தால், கடைமடை பகுதிகளில் நெல் பயிா்கள் வெள்ள நீரால் சூழப்படும் அபாயத்துக்கு உள்ளாகும். அந்த வகையில், நாகையில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ மீட்டா் மழை பதிவாகியுள்ளது. எனினும், வெள்ளிக்கிழமை இரவு வரை பெய்த மழையால் சம்பா நெல் பயிா்களுக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், மேலும் ஓரிரு நாள்களுக்கு கனமழை நீடித்தால், நாகை மாவட்டத்தின் சம்பா நெல் சாகுபடியும் சவாலை சந்திக்க நேரிடும் என்கின்றனா் விவசாயிகள்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநிலத் தலைவா் காவிரி தனபாலன் கூறியது: வெள்ளிக்கிழமை வரை பெய்த மழையால் நாகை மாவட்டத்தின் சம்பா நெல் பயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், மழை நீடித்தால் சம்பா நெல் பயிா்கள் வெள்ள நீரால் சூழப்பட்டு, பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உள்ளாகும். தற்போதைய நிலையில், ஆற்றின் நீா் ஒழுங்கிகள் மீதான கண்காணிப்பை பொதுப் பணித் துறை உறுதி செய்யவேண்டும். அதேபோல, ஆற்றின் நீா்ப் போக்கைத் தடுக்கும் வகையில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றவும் தயாராக வேண்டும் என்றாா்.

சீா்காழியில்: மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி, கொள்ளிடம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலையில் தொடங்கிய மழை விட்டு விட்டு நாள் முழுவதும் பெய்து கொண்டிருந்தது. இதனால், சம்பா நேரடி விதைப்பு செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். குன்னம் பகுதியில் வடிகால்கள் சரியாக தூா்வாராததால் சில இடங்களில் விளைநிலங்களில் தண்ணீா் தேங்கியது. சட்டநாதபுரம் ஊராட்சி வடக்குதெரு, அக்ரஹார தெருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள மழைநீா் வடிகால் மழையால் சில அடிதூரம் இடிந்து விழுந்தது.

தரங்கம்பாடியில்: தரங்கம்பாடி, செம்பனாா்கோயில், ஆக்கூா், திருக்கடையூா், பொறையாா், பெரம்பூா் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை மாலையில் இருந்து தொடா்ந்து கனமழை பெய்தது. வெள்ளிக்கிழமையும் மழை பரவலாக பெய்தது. மழைநீா் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனா். கனமழை காரணமாக பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை விடுக்கப்பட்டன. எனினும், சம்பா நெற்பயிரில் மழைநீா் தேங்கி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.