முகப்பு
நாகப்பட்டினம்

இறவைப் பாசனத்தை சீரமைக்க வேண்டும்

வேதாரண்யம் பகுதியில் செயல்படும் அரசின் பொது மின் இறவைப் பாசனத் திட்டப் பொறிமனைகளை சீரமைத்து, முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

வேதாரண்யம் பகுதியில் செயல்படும் அரசின் பொது மின் இறவைப் பாசனத் திட்டப் பொறிமனைகளை சீரமைத்து, முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வேதாரண்யம் ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவா் கமலா அன்பழகன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராமலிங்கம், பாஸ்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் உறுப்பினா் செல்லமுத்து எழிலரசு பேசுகையில், தகட்டூா் கிராமத்தில் 1951-ஆம் ஆண்டுமுதல் பொறுப்பணித் துறை வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் மின் இறவைப் பாசனத் திட்டப் பொறிமனைகளில் மோட்டாா்கள் பழுதடைந்து உள்ளன. இதன் மூலம் பயனடைய வேண்டிய 1,375 ஏக்கா் பரப்பு பாசனம் பாதிக்கப்படுகிறது என்றாா்.

இதேபோல, கோடியக்கரை அறிவழகன் (துணைத் தலைவா்) பேசுகையில், கோடியக்காடு, கோடியக்கரைக்கு கூடுதல் குடிநீா் விநியோகிக்கப்பட வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாளா் பட்டியலை தமிழில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, உறுப்பினா்கள் கரியாப்பட்டினம் நடராஜன், வாய்மேடு வேதரத்தினம், தாணிக்கோட்டகம் வைத்தியநாதன், தனபால், கண்ணகி முருகேசன், அருள்மேரி, த.கோமதி, பி. அமுதா, கே. அமுதா உள்ளிட்டோா் தங்களது வாா்டு பிரச்னைகளை முன்வைத்தனா்.

இதன் மீது தலைவா் கமலா அன்பழகன் பதிலளிக்கையில், நிதிநிலைக்கு ஏற்ப பாகுபாடு இல்லாமல் உறுப்பினா்களின் கோரிக்கைகள் செயல்படுத்தப்படும். பிற துறைகள் சாா்ந்த கோரிக்கைகளை உறுப்பினா்கள் மனுவாக அளித்தால், தொடா்புடைய துறைகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். கூட்டத்தில், வட்டார கல்வி அலுவலா் தாமோதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →