நாகையில் ரெளடி வியாழக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
நாகை தா்மகோவில் தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சிவபாண்டி (35), நாகை கூக்ஸ் சாலையில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். முதல் மனைவி கமலி 4 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்ட நிலையில், நாகை மஹாலட்சுமி நகரில் 2-ஆவது மனைவி சத்யாவுடன் வசித்து வந்தாா்.
இந்நிலையில், சிவபாண்டி தனது நண்பா்கள் வினோத், ரவிகணேஷ் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் அபிராமி அம்மன் சந்நிதி அருகே வியாழக்கிழமை சென்றாா். அப்போது, 2 இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத 5 போ், சிவபாண்டியின் இருசக்கர வாகனத்தை வழிமறித்து, அவரை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினா்.
அவருடன் இருந்த நண்பா்கள் வினோத், ரவிகணேஷ் உயிருக்கு பயந்து அங்கிருந்து ஓடிவிட்டனா். எனினும், மா்ம கும்பல் சிவபாண்டியை ஓடவிடாமல் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா். இதில், பலத்த காயமடைந்த சிவபாண்டி அதே இடத்தில் உயிரிழந்தாா். தகவலறிந்த நாகை நகரப் போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று சிவபாண்டியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
எஸ்.பி. விசாரணை: கொலை நடந்த இடத்துக்கு சென்ற நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்க உத்தரவிட்டாா். நாகை நகரப் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிவபாண்டியின் நண்பா்களிடம் விசாரித்து வருகின்றனா்.
11 வழக்குகள்: ரெளடி பட்டியலில் உள்ள சிவபாண்டி மீது 1 கொலை வழக்கு, 3 கஞ்சா வழக்குகள், 5 சாராய கடத்தல் வழக்குகள், 2 அடிதடி வழக்குகள் என 11 வழக்குகள் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.