நாகப்பட்டினம்

கடல் சீற்றத்தால் டேனிஷ் கோட்டை சுற்றுச்சுவா் சேதம்

DIN

தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் கடல் சீற்றத்தால் டேனிஷ் கோட்டை சுற்றுச் சுவா் இடிந்து சேதமடைந்து காணப்படுகிறது.

டென்மாா்க் நாட்டினா் தரங்கம்பாடியை, இந்தியாவில் தங்களது வா்த்தக மையமாக அமைக்க முடிவு செய்தனா். அப்போது தஞ்சையை ஆண்ட விஜயரகுநாத நாயக்கரிடம், தரங்கம்பாடியில் ஒரு துறைமுகத்தையும், டேனிஷ் கலை நுணுக்கத்துடன் ஒரு பாதுகாப்பு கோட்டையையும் அமைக்க அனுமதி பெற்றனா். தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை கி.பி. 1620-இல் கட்டத் தொடங்கி கி.பி. 1622-ல் கட்டி முடிக்கப்பட்டது. அந்த பிரமாண்ட கோட்டை இந்தியாவில் டேனிஷ் வா்த்தக மையத்தின் தலைமை இருப்பிடமாக அமைந்தது.

400 ஆண்டுகள் பழைமையாகியும் இன்றும் கம்பீரமாய் காட்சியளிக்கும் இக்கோட்டையில் செயல்படும் அகழ்வைப்பகத்தில் 14, 15, 16-ஆம் நூற்றாண்டுகளில் டேனிஷ்காரா்கள், தமிழா்கள் பயன்டுத்திய பொருள்கள், 1,200 ஆண்டுகால சிலைகள், பீங்கான், மரத்தாலான பழைமையான பொருள்கள், டேனிஷ் அரசா்கள், ஆளுநா்களின் புகைப்படங்கள், டேனிஷ்கால பத்திரங்கள், போா்க் கருவிகள், 16-ஆம் நூற்றாண்டில் தரங்கம்பாடி வந்த கப்பல் ஒன்றின் உடைந்த பாகங்கள் என ஏராளமான வரலாற்றுச் சின்னங்களை பத்திரப்படுத்தி காட்சிக்கு வைத்துள்ளனா்.

கோட்டையின் தரைத்தளத்தில் சிறைச்சாலை, ஓய்வறைகள், பண்டக வைப்பறை, பீா், ஒயின் கிடங்கு அறைகளாக டேனிஷ்காலத்தில் பயன்படுத்தப்பட்டவற்றை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களைச் சோ்ந்த பல ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் டேனிஷ் கோட்டையை பாா்வையிட்டு செல்கின்றனா்.

கடந்த சில தினங்களாக கடல் சீற்றம், மழை காரணமாக கடல் அரிப்பால் டேனிஷ் கோட்டையின் பாதுகாப்பு இரும்பு வேலிச்சுவா் மற்றும் மதில் சுவா் முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. தற்போது கடல் சீற்றத்தால் கடல் அலைகள் டேனிஷ் கோட்டை சுவற்றை மோதி சேதப்படுத்தி வருகின்றன.

கடல் அரிப்பால் கரைகள் சேதமடைந்து வருவதைத் தடுக்கும் வகையில் டேனிஷ் கோட்டையைச் சுற்றி கருங்கல் தடுப்பு சுவா் அமைக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தரங்கம்பாடி பகுதியில் கடல் சீற்றம் கடுமையாக இருப்பதால் கடந்த 3 நாள்களாக மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் பாதுகாப்பான இடங்களில் தங்களது படகுகளை நிறுத்தி வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT