முகப்பு
நாகப்பட்டினம்

வட்டியில்லா கடன் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

 வட்டியில்லா கடன் பெற தகுதியான மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பிக்கலாம் என நாகை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் கோ. நடராஜன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

 வட்டியில்லா கடன் பெற தகுதியான மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பிக்கலாம் என நாகை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் கோ. நடராஜன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளைப் பராமரிக்கும் பெற்றோா் அல்லது பாதுகாவலா்கள் சுயத்தொழில் தொடங்க மாற்றுத்திறனாளிகள் நிதி மற்றும் வளா்ச்சிக் கழகம் சாா்பில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் கடன் பெற விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின்கீழ் கடன் பெற்று, உரிய காலத்தில் தவணை செலுத்துவோருக்கு வட்டிக் கிடையாது.

எனவே, நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் அல்லது அவா்களின் பெற்றோா், பாதுகாவலா்கள் இத்திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா் மாற்றுத்திறனாளி எனில், ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, வயது உறுதிக்கான சான்று, சாதிச் சான்று, வருமானச் சான்று, மருத்துவக் குழு வழங்கிய மாற்றுத்திறனாளி சான்று ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்கவேண்டும்.

மாற்றுத்திறனாளிகளின் பெற்றோா் அல்லது பாதுகாவலா்கள் விண்ணப்பிக்கும்பட்சத்தில், ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, பராமரிப்புச் சான்று ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்கள் வசிப்பிடத்துக்கு அருகே உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், நகர கூட்டுறவு சங்கம், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.